கோவை தெற்கு தொகுதியில் தூக்கத்தைக் கெடுத்த கமல்ஹாசன்..? கமல் மீது வானதி சீனிவாசன் அட்டாக்..!

By Asianet TamilFirst Published Mar 18, 2021, 9:44 PM IST
Highlights

கோயமுத்தூரை பற்றித் தெரியாதவருக்கு ஓட்டுப்போட மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்தார்.
 

கோவை தெற்கு தொகுதியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முனைப்பு காட்டிவருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இத்தொகுதியில் களமிறங்கியுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வானதி சீனிவாசன் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், “மத்தியில் நேர்மையான, திறமையான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமைய போகிறது. இந்த தொகுதியில் ஒருபுறம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இன்னொரு புறம், இதுவரை கோவையை பற்றி எதுவும் பேசாத, கோவை மக்களுக்காக எதுவும் செய்யாத, கோவை மக்களையே தெரியாத, கோவையின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை தெரியாத நபர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 
கமல்ஹாசன் வாக்கிங் போகிறார், ஜாக்கிங் போகிறார், கம்பு சுத்துகிறார். கோவையில் ஸ்டார் ஓட்டலில் தங்கிக்கொண்டு ஆட்டோவில் போகிறார். ஆனால், கோவை தெற்கு தொகுதி மக்கள் ஏமாளிகள் அல்ல. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்ற போதும் இத்தொகுதி மக்களுக்காக நான் தொடர்ந்து போராடி வந்திருக்கிறேன். உங்களுக்காக உழைக்கிற மண்ணின் மகளான எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எந்தத் திட்டமானலும் மத்திய அரசிடம் பேசுகிற சக்தி, டெல்லியில் காரியம் சாதிக்கிற சக்தி, இந்தத் தொகுதி வேட்பாளரான எனக்கு உண்டு” என்று வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டினார் வானதி சீனிவாசன். ஆனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த முறை அதிமுக கூட்டணியால், வெற்றி சுலபமாக இருக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. ஆனால், கமல் போட்டியில் கோவை தெற்கில் கட்சிகளிடையே போட்டி கடுமையாகியுள்ளது. இந்நிலையில்  பாஜகவும் வானதியும் கமல் மீது தேர்தல் பிரசாரத்தில் அட்டாக் செய்ய தொடங்கியிருப்பதாகப் பார்க்க முடிகிறது. 

click me!