
தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் தான். எனினும் தீர்ப்பு அழுத்தமானது என கூறியுள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரத்தை ஓட்டு அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், 192 டிஎம்சி போதாது. எனவே கூடுதலாக 72 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்திற்கு வழங்கும் நீரை 192லிருந்து 132 டிஎம்சியாக குறைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 10 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.
நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், அதில் 14.75 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. அந்த நீரை கர்நாடகாவிற்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டதற்கு விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வருத்தம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காவிரி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பேசிய கமல்ஹாசன், தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. எனினும் காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது என்ற நீதிமன்றத்தின் கருத்து அழுத்தமானது. குறைவான நீர் கிடைத்தாலும் அதை வீணடிக்காமல் முறையாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தை வைத்து இனிமேலும் ஓட்டு அரசியல் செய்யக் கூடாது என கமல் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரத்தை வைத்து ஓட்டு அரசியல் செய்யக்கூடாது என்பதற்கு குடிசை எரியும்போது பீடி பற்ற வைக்கக்கூடாது என்பதை உவமையாக கூறினார்.