
ஜெயலலிதா வாழ்ந்தபோது ஜனரஞ்சக மரியாதையுள்ள பெண்கள் சிலரை அ.தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தி வந்தார். அவர்களில் அடித்து துவைத்து, பின்னிப் பெயர்த்தெடுத்தவர் மாஜி நடிகை விந்தியா. கருணாநிதியை அவர் வசைபாடினாலும் கூட, அந்த மாடுலேஷனுக்காகவே தி.மு.க.வினரே அதை கேட்பர்.
விந்தியாவுக்கு அடுத்து பிரச்சார நாயகிகளாய் இருந்தவர்களில் ஒருவர் நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வுக்காக தமிழகம் முழுவதும் சுறுசுறு சுற்றுப்பயணம் செய்தவர்.
ஜெ., மரணத்துக்குப் பின் சைலண்டாக இருந்தவர் இப்போது அ.தி.மு.க.விலிருந்து விலகிவிட்டார். ஏன்? என்று கேட்டதற்கு அவர் சொல்லும் காரணங்கள்...
“இப்போது இருக்கும் அ.தி.மு.க. தலைமைக்கு என்னை போன்று கட்சிக்கு உழைத்தவர்களை மதிக்க தெரியவில்லை. அம்மாவை முதல்வராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இவர்களை யார் தேர்ந்தெடுத்தார்கள்?
கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை என் கணவர் குப்புசாமிக்கு கேட்டது உண்மைதான். அம்மாவிடமே அவருடையை பயோடேட்டாவை கொடுத்து, உதவி கேட்டோம். அம்மாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை என் கணவர் மூன்று தடவை சந்தித்தார். அந்த பதவியில் உட்காரும் எல்லா தகுதியும் என் கணவருக்கு இருக்குது.
ஆனால் தேடுதல் குழு தலைவரான சுதா ரகுநாதன் வேண்டுமென்றே பிரமிளா குருமூர்த்தி என்பவரை லிஸ்டில் இணைத்துவிட்டு, அவருக்கு பரிந்துரை செய்தார். முதல்வர் பழனிசாமியும் அதற்கு சம்மதித்துவிட்டார். இந்த அவமானங்களுக்குப் பிறகு அந்த கட்சியில் இருக்கத்தான் வேண்டுமா?
அ.தி.மு.க.வில் தலைமை ஏற்க தகுதியான நபர்கள் என்று இப்போது யாருமே இல்லை. இப்போ இருக்கிறவங்க எல்லாரும், எப்படி கல்லா கட்டுறது? அப்படிங்கிறதுலதான் குறியா இருக்கிறாங்க.
ஓ.பி.எஸ். உண்மையானவரா இருந்திருந்தால் அவரை நம்பி வந்தவர்களுக்கும் பொறுப்பு வாங்கி கொடுத்திருக்கணும். ஆனால் இவரு மட்டும் பதவியில அமர்ந்துவிட்டு மற்றவர்களை கைவிட்டுட்டாரு. அடுத்த தடவை ஆட்சிக்கு வரமுடியாதுன்னு தெரிஞ்சு, ரெண்டு முதல்வர்களும் தங்களோட தேவைகளை மட்டும் நிறைவேத்திக்கிறாங்க.
நான் தினகரனின் ஆதரவாளர் இல்லைதான். ஆனாலும் சொல்றேன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவருக்கும் மக்களிடம் ‘ஃபேஸ் வேல்யூ’ உள்ளது. அதனாலதான் அவருக்குன்னு ஒரு கூட்டம் கூடுது.” என்று தினாவுக்கு அடேங்கப்பா சர்டிஃபிகேட் கொடுத்து முடித்திருக்கிறார்.
பாருடா, இ.பி.எஸ்ஸையும், ஓ.பி.எஸ்ஸையும் ஆளாளுக்கு போட்டு பொளக்குறாங்களே!