
காவிரி உரிமை தமிழகத்தில் இருந்து பறிபோனதற்கு மத்திய அரசே காரணம் எனவும் காவிரி விவகாரத்தில் வில்லன் மோடி தான் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் – கர்நாடகாவிற்கும் காவிரி விவகாரம் காலம் காலமாக தொடர்ந்துகொண்டே இருந்தது. இதுவரை தமிழகத்திற்கு முழு மனதோடு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இதுகுறித்து கர்நாடகாவோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் ஒரு பலனும் இல்லை. ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தே தண்ணீர் வாங்கி வேண்டி இருந்தது.
இதையடுத்து, நூற்றாண்டுகளாக நீடித்துவரும் இந்த காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து கூடுதல் நீர் கோரி தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் என மொத்தமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை எனவும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தரவேண்டும் எனவும் உத்தரவிட்டது.
தற்போதைய தீர்ப்பின் காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
தமிழகம் கூடுதலாக 70 டிஎம்சி நீரை கேட்டிருந்த நிலையில், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீரை அளித்து மொத்தம் 284.75 டிஎம்சி நீரை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், காவிரி உரிமை தமிழகத்தில் இருந்து பறிபோனதற்கு மத்திய அரசே காரணம் எனவும் காவிரி விவகாரத்தில் வில்லன் மோடி தான் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.