நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலத்திற்கும் குறைவான காலமே இருப்பதால் தமிழகத்தில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்- கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 3 வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்க எதிர்கட்சிகள் திட்டம் தீட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த முறை பாஜகவை எதிர்க்கும் வகையில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம் வகுத்துள்ளது.
undefined
யாருடன் கூட்டணி- கமல்ஹாசன் ஆலோசனை
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியோடு நெருக்கம் காட்டி வருகிறார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக ஆலோசிக்க கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,
கோவையில் ஆலோசனை
கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் "2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்' வருகிற 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும்.. அமித்ஷா பேச்சு..