மகளிரின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்து, பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையையும் பெற வழிவகுக்கும் என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் வைத்துள்ளது தமிழக அரசு.
பெண்கள் அதிகாரமளித்தலுக்கு பங்களிக்கும் உன்னத திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி (இன்று), அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ், 1.065 கோடி மகளிர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நிதி ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
undefined
இதையும் படிங்க;- Kalaignar Urimai Thittam: பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்!!
முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததும், அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குக்கு சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1ஆம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு புரட்சிகர திட்டங்களும் இங்கிருந்தே தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கு ஆட்சி புரிந்து வரும் திராவிட கட்சிகளே காரணம் என்றால் மிகையாகாது. திராவிட கட்சிகளை எதிர்ப்போர் கூட அத்தனை எளிதாக இதனை புறந்தள்ளி விட முடியாது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மகளிருக்கான அதிகாரமளித்தலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனேயே ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்தோடு செயல்படும் திராவிட மாடல் அரசை முன்னெடுப்பதாக அறைகூவல் விடுத்தார்.
உழவுக் கருவிகளை கண்டுபிடித்து வேளாண் சமூகமாக மாறியபோதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகத்தான் இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் பெண் குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இந்த ஆண் - பெண் பால் பேதம் சமூகத்தின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக அமைந்துள்ளது. இதனை களைய தமிழ்நாட்டின் திராவிட அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், தருமாம்பாள் கைம்பெண் மறுமணத்திட்டம், கலப்பு திருமண உதவித்திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், திராவிட மாடல் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். முதல்வராக பதவியேற்ற உடன், நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்துக்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திட்டார். இந்த திட்டம் சமூக புரட்சிக்கு வித்திடும் திட்டமாக அறியப்படுகிறது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியர் தொடர்ந்து உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக ’புதுமைப் பெண்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இது பெண் கல்வியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மகத்தான திட்டம் என பாராட்டப்படுகிறது.
அதேபோல், பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளி மாணவர்கள் காலையில் சத்தான உணவருந்தி படிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். எந்த ஒரு அரசும் தம் மக்களுக்கு அளிக்கும் சிறந்த கொடை கல்வி. அதனை பெரும் பொருட்டு, அனைத்தையும் தருகிறோம்; படிக்க வாருங்கள் என்கிறது தமிழ்நாடு அரசு. `மக்களைத் தேடி மருத்துவம்’, ‘நான் முதல்வன் திட்டம்’ என பல்வேறு திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, உரிமைப் பாதையில் மற்றொரு உன்னத திட்டமான, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயரில் இருந்தே இதற்கான நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும். இது பெண்களுக்கான நிதியுதவி திட்டமல்ல; பெண்களுக்கான உரிமை திட்டம் என கூறி மகிழ்கிறது தமிழக அரசு. மகளிரின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்து, பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையையும் பெற வழிவகுக்கும் என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் வைத்துள்ளது தமிழக அரசு.
Universal Basic Income எனும் உலகளாவிய அடிப்படை வருமானம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்துக்காக வாழ் நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கும் வழிவகுக்கும்.
இதையும் படிங்க;- சொன்னதைச் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பாராட்டும் பயனாளிகள்!
இந்த திட்டம் பலராலும் பாராட்டப்படுகிறது. பெண்கள் உரிமைக்கான வழக்கறிஞர் கவிதா சண்முகவேல் கூறுகையில், “ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் பண உதவி வழங்குவது, வறுமையைப் போக்கவும், பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும் உதவும். உணவு, தங்குமிடம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த தொகை உதவும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். பெண்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் நிலையான வளர்சிக்கு பங்களிக்கும்.” என்கிறார்.
மகளிருக்கான உரிமைத் தொகையை அவர்கள் தங்களது முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறார் மதுரையை சேர்ந்த மகளிர் செயற்பாட்டாளர் ராஜேஸ்வரி. இதுகுறித்து அவர் கூறுகையில், “பெண்கள் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ளவும், சிறு தொழில்களை தொடங்கவும் அல்லது அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவுகிறது. எனவே, இந்த பணத்தை ஒன்று அவர்கள் சேமிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது தங்களது முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். உரிமைத் தொகையின் மூலம், தையல் போன்ற பயிற்சிகளுக்கு பயன்படுத்தி சுயமாக பெண்களால் தொழில் தொடங்க முடியும். இது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்கிறார்.
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஷாலினி கூறுகையில், “தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக இத்திட்டம் வரலாற்றில் இடம்பெறும். இல்லறப் பொறுப்புகளுடன் பணிகளுக்கு சென்று அதன் மூலம் தங்கள் குடும்பங்களின் உயர்வுக்கு உழைத்து வரும் மகளிரின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக உரிமை தொகை வழங்கப்படுகிறது. இது பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். பொருளாதாரத் தேவைகளுக்கு யாரையும் அவர்கள் சார்ந்திருக்க தேவையில்லை.” என்றார்.