மணிகண்டன் அருந்திய நஞ்சுக்கு நீதி..??? திராவிட மாடல் இதுதானா.? திமுக அரசை அலறவிடும் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2022, 7:54 PM IST
Highlights

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு அதிகாரி லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு:-

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு அதிகாரி லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு:-

 " நஞ்சுக்கு நீதி "  தேரா மன்னா செப்புவது உடையேன்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மத்திய அரசின் பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்த வீடு கட்டி வருகிறார். திராவிட மாடலின் புரையோடிப்போன லஞ்சம் அந்த இளைஞன் உயிரை பலி வாங்கி விட்டது. மத்திய அரசு வழங்கும், இலவசமாக வழங்கும் பணத்தை முழுமையாக மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் மணிகண்டன் கூரை ஓடுகள் கொண்ட வீட்டில் வசித்துவந்த அவரும் இவரது குடும்பத்தினரும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட ஆரம்பித்து உள்ளனர்.

ஆனால் இடையே கமிஷன் கேட்டு இடைத்தரகர் தொல்லை, இதனால் அக்கம் பக்கத்தில் மற்றும் வேலைக்கு செல்வதற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொண்டு பத்து நாட்களுக்கு முன்பு கட்டியுள்ளார். ஆனால் 10 நாட்கள் கடந்தும் பணம் வராததால் மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டபோது சரியாக பதில் இல்லாததால் மனமுடைந்த அந்த இளைஞர் தனது இணையத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பாவி உயிர் பலியான பிறகு லஞ்சம் கேட்ட மேற்பார்வையாளர் மகேஸ்வரனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தமிழக அரசின் ஆணைப்படி தற்காலிகமாக மட்டும் பணியிடை நீக்கம் செய்து அமைதியாகிவிட்டார். இது யாருக்கோ எங்கோ நடந்த சம்பவம் அல்ல, தமிழக அரசின் ஓராண்டு சாதனை மட்டுமல்ல, நமக்கு நாளை நடக்கப்போகும் சம்பவத்திற்கான முன்னெச்சரிக்கை. காலம் காலமாக உதிரத்தில் ஊறிப்போன ஊழல், திராவிட மக்களின் ஒப்பற்ற உதாரணம், மத்திய அரசு பணத்தை மாநில மக்களுக்கு வழங்க கமிஷன் கலெக்சன் காசு.

அச்சமின்றி அதிகாரிகள் லஞ்சம் கேட்க தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறையின் கைகள் ஆளும் கட்சியினரால் கட்டப்பட்டுவிட்டன. சமூக விரோதிகளும் கட்சியின் அராஜக அரசியல்வாதிகளும் எல்லா மட்டத்திலும் லஞ்சம் பெற தொடங்கியிருக்கிறார்கள். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெறுகிறது. மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திலும் பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்திலும் பெருவாரியாக ஊழல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியினரின் ஆசி பெற்றவர்களுக்கு முதலில் திட்ட  பயனாளிகளுக்கான தகுதி கிடைக்கிறது. மத்திய அரசின் மக்களுக்கான நிதியை பிரித்துக் கொடுக்கவே பெரும் தொகை பெறப்படுகிறது. இதை தடுக்கத்தான் கடைக்கோடி மக்களுக்கும் பணம் சென்று சேர்வதற்காக ஜன்தன் யோஜனா நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊழல் ஏதுமின்றி மக்களுக்கு நேரடியாக மத்திய அரசு வழங்கினால் அது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாக கூச்சலிடும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவு சங்கு ஊதிக் கொண்டு இருக்கும் ஊழல் பங்காளிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். ஊழல் லஞ்சம், லஞ்ச லாவண்யத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் திராவிட மாடலுக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? எனக்கு இதயம் வலிக்கிறது, அப்பாவி இளைஞனின் உயிர் திரும்ப வருமா? தூக்கில் இளைஞன் தலை தொங்கி விட்டது. ஆனால் அவமானத்தில் ஆட்சியாளர்களின் தலைதான் தொங்கி இருக்க வேண்டும். ஊழலை எதிர்த்து உயிர்விட்ட மணிகண்டனின் ஆத்மாவிற்கு ஒரு அர்த்தம் வேண்டும். அந்த இளைஞனின் மன வலிக்கு மருந்து வேண்டும். பிரதமர் இலவசமாக வழங்கிய கனவு இல்லத்தை கிடைக்கச் செய்யாமல் காசுக்காக மனித உயிரை காவு வாங்கிய தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும்.  ஒரு சிலரை தவிர முதுகெலும்பில்லாத ஊடகங்கள் இந்த செய்தியை முன்னெடுக்கவில்லை, தமிழக அரசை கேள்வி கேட்க வில்லை, ஆனால் உண்மையை மறைக்க முடியாது.

ஆனால் மக்கள் கேள்வி கேட்பார்கள். மாநில அரசை மக்கள் தட்டிக் கேட்பார்கள். மணிகண்டன் மரணத்துக்கு மக்கள் நியாயம் கேட்பார்கள், மத்திய அரசு வழங்கும் நிதியை எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி நாடக அரசியல் நடத்தும் அறிவிப்பு ஆட்சியாளர்களுக்கு மக்கள் அறிவு புகட்டுவார்கள். தேரா மன்னா செப்புவது உடையேன் என்று நெஞ்சம் பதறி ஆட்சித் தலைவனை கேள்விகேட்க கண்ணகி தாயை வணங்கி மக்களே நான் புறப்பட்டு விட்டேன். நன்னிலத்திற்கு அனைவரும் ஒன்றுகூடி அரசிடம் மணிகண்டன் அருந்திய நஞ்சுக்கு நீதி கேட்போம். ஏய்த்து பிழைப்பவர்களுக்கு நல்ல புத்தி புகட்டுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!