சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த வழக்கு மீதான தீர்ப்பு: ஒத்திவைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 11:07 AM IST
Highlights

சித்த மருத்துவர் தணிக்காசலம்  குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், அக்டோபர் 1ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.
 

போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு மீதான தீர்ப்பை, அக்டோபர் 1ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கொரோனா  தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு  காவல்துறையினர், அவரை கைது செய்த நிலையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், சித்த மருத்துவ பிரிவில் இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டது ஏன் எனவும்,  சித்த மருத்துவ பிரிவில் எத்தனை பதவிகள் காலியாக உள்ளன என்பது குறித்து பதிலளிக்க ஆயுஷ் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தனர். இன்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சித்த மருத்துவ பிரிவில் எந்த பதவியும் கலைக்கப்படவில்லை எனவும், காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடத்தை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும்  சமமாக ஊக்கவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.மேலும்,  நாடாளுமன்றத்தில் வழங்கும் அளவுக்கு, கபசுர குடிநீர் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்திய மருத்துவ முறை மற்றும் மருத்துவமனை ஊக்குவிப்பது தொடர்பான திட்டம் குறித்து பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சித்த மருத்துவர் தணிக்காசலம்  குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், அக்டோபர் 1ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.
 

click me!