பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு..!! தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 10:38 AM IST
Highlights

தேர்தல் நடைமுறை விதிகளின்படி ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். எனவே காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என பரவலாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான தேதிகளை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார்.  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12:30 மணி அளவில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேதியை அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொத்தம்  64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 1 நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 65 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. 

தேர்தல் நடைமுறை விதிகளின்படி ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். எனவே காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என பரவலாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதேபோல் மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கானா பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. எனவே அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நவம்பர் 29ம் தேதிக்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அதேபோல் தமிழகத்தில் திருவெற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ வாக இருந்த கே.பி.பி சாமி, குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.காத்தவராயன் ஆகியோர் பிப்ரவரி மாதம் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். 

எனவே தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 3 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கிறது. அதேபோல்  சமீபத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார் தற்போது அந்த தொகுதியும் காலியாக உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12:30  மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அப்போது பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அவர் அறிவிக்க உள்ளார். அதேநேரத்தில் இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. பிகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி  நடக்கிறது, இதில் பாஜகவும் இணைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடர்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் பீகாரில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

click me!