
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீதான தீர்ப்பு இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி சசிகலாவை தேர்வு செய்தனர்.
இதனையடுத்து சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்டோர் போர்க் கொடி உயர்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்த ஓபிஎஸ் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி தனி அணியாக செயல்படத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுக தங்களுக்குத் தான் சொந்தம் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் ஆர்.கே,நகர் இடைத் தேர்தல் வந்ததால், இரு தரப்பினருக்கும் கிடைக்காமல் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
மேலும் ஓபிஎஸ் அணி சார்பில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பிலும் லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லுமா ? செல்லாதா ? என தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.