
சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவா ராய் இருவரும் காலை 10.32 மணிக்கு 6-வது எண் அறைக்கு வந்தனர்.
அப்போது அந்த நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நீதிமன்ற ஊழியர்கள் தீர்ப்பு விவரம் அடங்கிய கவரின் சீலை உடைத்து நீதிபதிகளிடம் ஒப்படைத்ததும், இரு நீதிபதிகளும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவிய நிலையில், தீர்ப்பை அறிவித்த நீதிபதி கோஷ் ‘‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு பற்றி உங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த சுமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’’ என்று கூறி, தீர்ப்பின் முக்கிய சாராம்சங்களை 8 நிமிடங்களில் அறிவித்தார். அப்போது நேரம், 10.40 மணி.
உடனே அமைதியாக இருந்த நீதிமன்ற அறையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களும் வக்கீல்களும், தீர்ப்பு விவரத்தை சொல்வதற்காக அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
நீதிபதி கோஷை தொடர்ந்து தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி அமிதவா ராய், ‘‘சமூகத்தில் அதிகரித்துவரும் ஊழல் அச்சுறுத்தல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக’’ குறிப்பிட்டார்.
நீதிபதி அமிதவா ராய் கூறுகையில், “ நாங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திவைக்கிறோம். அதேசமயம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துகிறோம். ஜெயலலிதாவுக்கு எதிரான(ஏ1) வழக்கு கைவிடப்படுகிறது. மற்ற 3 குற்றவாளிகளும் இன்றுக்குள் சரண் அடைய வேண்டும்'' என்றார்.