சரக்கு அடிக்காமல் இருக்க பிராமணப்பத்திரம்... ஜாமீன் வழங்க நீதிபதி கறார்..!

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2021, 3:14 PM IST
Highlights

மதுபோதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வழக்கில் இனி மது குடிக்க மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. 
 

மதுபோதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வழக்கில் இனி மது குடிக்க மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. 

 திருச்சியைச் சேர்ந்த சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர், நண்பர்களுடன் ஒன்றாக மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் மது பாட்டிலால் தாக்கப்பட்ட வழக்கில் இவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ‘‘அதிகளவிலான இளைஞர்கள் மது அருந்துவதால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த இரு இளைஞர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கே வந்திருக்காது. எனவே, மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்கப்படும்’’என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். இதை ஏற்பதாக அவர்கள் கூறினர். 

இன்று மனு மீதான விசாரணையை தொடர்ந்தது. அப்போது, இனி மது குடிக்க மாட்டோம் என்று சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பிரமாணப் பத்திரம் போதாது என்றும் ஊர் முக்கியஸ்தவர்கள் யாராவது உறுதி மொழி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உறுதி மொழி வழங்கினால் ஜாமீன் பற்றி பரிசீலிக்கலாம் என்று கூறிய நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார். இதனால் மீண்டும் அந்த இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 

click me!