’தம்பிதுரையை தோற்கடிக்க செந்தில்பாலாஜி போட்டுக் கொடுத்த பலே திட்டம்...’ தம்பியை நினைத்து பெருமைப்படும் அக்கா ஜோதிமணி..!

By Thiraviaraj RMFirst Published May 27, 2019, 5:34 PM IST
Highlights

 கரூர் மக்களவை தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி., என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.

கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்துள்ளார். 

தனது வெற்றி குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அதில், ‘’இந்த வெற்றியை சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.

ஆனால், தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது. என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.

நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் தம்பி வி.செந்தில்பாலாஜியும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.

முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது. கரூர் மக்களவை தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி., என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்’’ என அவர் தெரிவித்தார்.

click me!