சசிகலா மீதான களங்கத்தை தினகரன் துடைத்தாரா..? சும்மா ஏதாவது சொல்லாதீங்க.. ஜெய் ஆனந்த் பதிலடி

First Published Apr 26, 2018, 10:13 AM IST
Highlights
jeyanandh retaliation to dinakaran faction and vetrivel


தினகரன் - திவாகரன் இடையேயான மோதல் முற்றிவருகிறது. இருதரப்பும் பரஸ்பரம் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. இந்நிலையில், சசிகலா மீதான களங்கத்தை தினகரன் தான் துடைத்தார் என்ற வெற்றிவேலின் கருத்துக்கு, திவாகரனின் மகன் ஜெயானந்த், தனது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது.

சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், தனித்து விடப்பட்ட தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி கண்டார். இந்த வெற்றி, தினகரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உத்வேகத்தை அளித்தது.

இதையடுத்து, அதிமுகவை கைப்பற்றும்வரை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பு தேவை என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே தினகரனின் ஆதரவாளர்களாக இருந்த பலரும் அமைப்பின் பெயரில் அண்ணா அல்லது திராவிடம் என்ற வார்த்தைகள் வரவில்லை என்ற அதிருப்தியில் இருந்தனர். நாஞ்சில் சம்பத், இதை வெளிப்படையாக கூறிவிட்டு தினகரனிடமிருந்து விலகினார்.

தற்போது அதே விமர்சனத்தை முன்வைத்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், தினகரன் - திவாகரன் இடையே நடந்துவந்த பனிப்போர் தற்போது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. 

தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கடந்த 23ம் தேதி அன்று தனது முகநூல் பக்கத்தில் இட்ட பதிவில், எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தை சார்ந்த திவாகரனும்,ஜெயானந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது. ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது என பதிவிட்டிருந்தார்.

வெற்றிவேலின் பதிவிற்கு பதிலடி கொடுக்கு விதமாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் முகநூல் பக்கத்தில் பல பதிவுகளை போட்டிருந்தார். தனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால், ஓராண்டிற்கு முன்னதாக தினகரனுடன் சேர்ந்த இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. திட்டமிட்டே புறக்கணித்தால் அவர் எப்படி பொறுத்திருப்பார்? அவர் என்ன சிறுவனா? என பதிவிட்டிருந்தார்.

மேலும், சசிகலாவின் மீதான களங்கத்தை தினகரன் தான் துடைத்தார் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான முகநூல் பதிவில், சின்னம்மா(சசிகலா) மீது உள்ள களங்கத்தை டிடிவி தான் துடைத்தார் என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.

சின்னம்மா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சின்னம்மாவின் பக்கபலம் மற்றும் அம்மா அவர்கள் சின்னாமாவை எடுக்க சொன்ன வீடியோ - இவை மூன்றும் தான் டிடிவி -யை கரைசேர்த்தன. ஆர்.கே நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.

இதன்மூலமாக இருதரப்புக்கும் இடையேயான மோதல் முற்றிவருகிறது. 
 

click me!