
திருவாரூர்
எனது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் காவலாளர்களால் என்ன செய்ய முடியும்? என்று திருவாரூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் திருவாரூர் இரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், அமைப்பு செயலாளர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், "திருவாரூரில் மாலையில் நாங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை காவலாளர்கள் காலையில் நடத்த வேண்டும் என்று கூறினர். இதற்கு ஒ.பன்னீர்செல்வம் நாகைக்கு இன்று (நேற்று) வர இருப்பதே காரணம் என கூறப்பட்டது.
டெல்டா மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்காக இன்றைய ஆட்சியாளர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சி 100 ஆண்டுகள் நடக்க போவதாக நினைத்துக்கொண்டு காவலாளர்கள் புலிகேசி வேலைகளை பார்த்து வருகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில் பீடு நடைபோட்ட காவல்துறை இன்று ஏவல்துறையாக செயல்படுகிறது. அடுத்தமுறை நான் இங்கு வரும்போது காவல்துறை தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும்.
திருத்துறைப்பூண்டி எனது சொந்த ஊர். அங்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் காவலாளர்களால் என்ன செய்ய முடியும்.
கர்நாடகாவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கர்நாடகாவின் பயன்பாட்டுக்குபோக மீதி தண்ணீரைதான் தமிழகத்துக்கு தர முடியும் என கூறியுள்ளார். இவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்கள். கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கருத்தால் காவிரி பிரச்சனையில் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான எந்த ஒரு திட்டத்தையும் சோழ மண்டலத்தில் கொண்டு வர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அனுமதிக்காது.
நிச்சயமாக இந்த அரசு மக்களை ஏமாற்றும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாணவர்கள் மெரினா கடற்கரையில் கூடியதைபோல காவிரி நீரை பெற சோழ மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலையில் கூடினால் தண்ணீரை பெற முடியும் என்ற நிலை தற்போது உள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், முன்னாள் நகரசபை தலைவர் சிவராஜமாணிக்கம், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் முருகானந்தம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.