
தஞ்சாவூர்
பொதுச் செயலாளர் சசிகலா மீதுள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறார் திவாகரன் என்று தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், "ஆளும் கட்சியினர் தங்களை பதவியில் அமர்த்தியவர்களுக்கே துரோகம் இழைத்தவர்கள். காவிரி பிரச்சனையிலும் ஆளும் கட்சியினர் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டனர்.
கர்நாடக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு கேட்பதற்காக கர்நாடகத்தின் பயன்பாட்டிற்குபோக எஞ்சிய தண்ணீரைதான் தமிழகத்திற்கு கொடுப்போம் என்கிறார். இது ஆளும் கட்சியின் இரட்டை வேடம் என்பதை தெளிவுபடுத்துகிறது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும், காவிரி பிரச்சனைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஆளும் கட்சியினர் கண் துடைப்புக்காக பொதுக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டாவைச் சேர்ந்த தமிழக மக்கள் மிகவும் விழிப்புணர்வு பெற்றவர்கள். அவர்களிடம் ஆளும் கட்சியினர் நடத்தும் நாடகம் எடுபடாது.
பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளிதரராவ் பேசுவதை கேட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தல்வரை கூட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று தோன்றுகிறது.
பா.ஜ.க.வால் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்ற காரணத்தால் அவர்கள் தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி பிரச்சனையில் பாராமுகமாக நடந்துகொள்கின்றனர். இதனால் சோமாலியாவில் ஏற்பட்டதுபோல தமிழகத்திலும் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ? என்று அச்சம் ஏற்படுகிறது.
தமிழக மக்களை தமிழகத்தை விட்டு பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு தமிழகத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்த்துவிட்டு அவர்கள் மூலம் வாக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர்.
மாநிலத்தை ஆளுகின்றவர்கள் தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டால் போதும் என்ற நினைப்பில் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.
குடும்ப ஆதிக்கத்தை செலுத்திய ஒரு கட்சி இன்றும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் தவிக்கிறது. இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
திவாகரன் எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சகோதரர் என்பதை தவிர வேறு எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியில் குடும்ப ஆதிக்கத்தை செலுத்த கூடாது. உறவு வேறு, கட்சி வேறு.
கடந்த 1984–ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் "நமது கழகம்" என்ற கட்சியை தொடங்கினார். அதில் தொண்டர் படையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் திவாகரன். திவாகரன் பொதுச்செயலாளர் சசிகலா மீது உள்ள கோபத்தை என்னிடம் காண்பிக்கிறார். அவரை சிறையில் கூட சென்று சந்திப்பதில்லை.
நான் தொண்டர்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன். வேறு யாருக்கும் நான் பதில் கூற தேவையில்லை. பொதுச்செயலாளருக்கு என்னை பற்றி நன்கு தெரியும். நான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன். அவர்களே என்னை ஒதுங்கிக்கொள்ள சொன்னபோது நான் ஒதுங்கிக்கொண்டேன்.
அவர்கள் மறைவுக்கு பின்னர் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா அழைத்ததன்பேரில் நான் மீண்டும் அரசியலுக்கு வந்தேன். சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு கட்சியின் பாதுகாப்பு கருதி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இவையனைத்தும் தன்னிச்சையாக நடந்தது. இதில் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது.
எங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18–ல் இருந்து என்னையும் சேர்த்து 22 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. அதன் தொடக்கம் தான் நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
செந்தில்பாலாஜியை பற்றி அமைச்சர் தங்கமணி சொன்ன கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல. தங்கமணி பொய்யான மனிதர். செந்தில்பாலாஜியை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தை ஒரு மாவீரன் போல் செயல்பட்டு காத்துவருகிறார்" என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.