ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.. முதலமைச்சர் எடப்பாடியார் திறந்து வைக்கிறார்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 10:12 AM IST
Highlights

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் இன்று முதல் நினைவு இல்லமாக மாறவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை இன்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கிறார். 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் இன்று முதல் நினைவு இல்லமாக மாறவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை இன்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அது நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.  

சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த குழு வழங்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நினைவில்லமாக மாற்றுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பொதுமக்களின் பார்வைக்காக வேதா இல்லத்தை நினைவு இல்லமாக திறந்துவைக்கிறார். சுமார் 10 கிரவுண்டு பரப்பளவில் மூன்று அடுக்காக அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுமார் 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளது. அதில் 14 வகையான தங்க நகைகளும் மற்றும் நினைவு பொருட்களும் இடம் பெற்று இருப்பதாக தெரிகிறது.

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை மக்களுக்கு பறைசாற்றும் வகையிலான அரியவகை புகைப்படங்கள் அந்த இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி அதை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் ஒரு சகோதரர் தீபக் ஆகியோர் ஜெயலிதா வாழ்ந்த இல்லம் தங்களுக்கு உரிமையானது எனவும் அதை நினைவு இல்லமாக மாற்ற கூடாது எனவும் வழக்கு தொடர்ந்து இந்த நிலையில், நினைவு இல்லமாக மாற்றுவதை தடுக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!