திமுகவுக்கும் பாஜகவுக்கும் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி... பெருமிதத்தில் சீமான்...!

By Asianet TamilFirst Published Jan 27, 2021, 10:20 PM IST
Highlights

தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும் திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் கோவை மண்டலத்தில் உள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
அப்போது அவர் கூறுகையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் ஆண்களும் பெண்களும் தலா 117 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். மார்ச் 20 அன்று சென்னையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதையும் அப்போது அறிவிப்பேன். தேசியக் கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டியாக விளங்கி வருகிறது.


எங்கள் கட்சியில் சுற்றுச்சூழல் பாசறையைத் தொடங்கி, அதன்மூலம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக திமுகவிலும் சுற்றுச்சூழல் பாசறை தொடங்கப்பட்டது. தமிழ்க் கடவுள் முருகன் என்ற முழக்கத்துடன், வேலைக் கையில் எடுத்தோம். அதைப் பாஜகவும், திமுகவும் தற்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் இதையெல்லாம் வாக்குகளுக்காகச் செய்கிறார்கள். நாங்கள் அதை உணர்வாகச் செய்துகொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி அமைந்தால், மக்களின் பிரச்னைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு முன் 22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது இதை ஏன் செய்யவில்லை? இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது.
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வீழ்ந்து கிடக்கிறது. தென் மாநிலங்களில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க முயற்சிக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வட மாநிலத்தவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதல் ஆளாகக் களத்தில் இறங்கும். தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அக்கட்சி செவி சாய்க்காது. நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் ஒரு  தமிழக மீனவனைக்கூட இலங்கைக் கடற்படையால் தொட முடியாது. நாம் தமிழர் கட்சிக்கென தனிக் கருத்தியல் உள்ளது. அதை முன்வைத்து எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்போம்” என்று சீமான் தெரிவித்தார்.
 

click me!