
தற்போதைய சூழ்நிலையில் என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆர்.கே.நகரில் போட்டியிட எந்த சின்னத்தை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் எனவும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினமே வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டனர். இவர்களை தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிட பெரும்பாலோனோர் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த முறை தேர்வு செய்யப்படவில்லை. அதனால் தற்போது கரு நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் சுயேட்சையாக நடிகர் விஷாலும் களம் காண்கிறார். கடந்த முறை போட்டியிட்ட ஜெ.தீபா இந்த முறையும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் காலக்கெடு இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
3 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெ.தீபாவுக்கும் 91 வது டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, தற்போதைய சூழ்நிலையில் என்னுடைய வேட்பு மனுவை நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆர்.கே.நகரில் போட்டியிட எந்த சின்னத்தை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.