
மத்திய அரசுடன் இதுநாள் வரை சுமூகமான உறவை தொடர்ந்து வந்த எடப்பாடி பழனிசாமி அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைகளால் ஜெயலலிதா பாணி அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற சிறிது நாட்களிலேயே மோடியை சந்தித்துவிட்டு வந்தார். அப்போது முதலே மோடி – எடப்பாடி இடையே சுமூகமான உறவு இருந்து வந்தது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றும் முதல் மாநிலமாக தமிழகம் மாறிப்போனது. இதற்கு உதாரணமாக உதய் மின் திட்டத்தில் இணைந்ததை கூறலாம். இதுமட்டும் அல்லாமல் வி.ஐ.பிக்கள் பயன்படுத்தும் சைரன்களை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மோடி வேண்டுகோள் தான் விடுத்தார்.
மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் மனம் உவந்து ஏற்று வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அரசை வெளிப்படையாகவே எதிர்க்க என்ன காரணம் என்று புரியாமல் இருந்து வந்தது. இதற்கான பதில் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடியை சந்தித்த போது கிடைத்தது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதிசெய்யும் படி பா.ஜ.க மேலிடம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதனை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்துள்ளார். இதனால் தான் வருமான வரித்துறையை வைத்து மிரட்ட ஆரம்பித்தது மத்திய அரசு.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது தான் மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக இது போன்ற அறிக்கைகளும் கடிதங்களும் வெளியாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அண்மைக்காலமாகத்தான் மத்திய அரசின் முடிவுகளை ஏற்க மறுத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது தற்போது தான் ஜெயலலிதா பாணி அரசியை எடப்பாடி கையில் எடுத்துள்ளார்.