ஜெயலலிதா படம் மறைப்பு.. அம்மா உணவகத்தில் மீண்டும் கருணாநிதி படம்... தவியாய் தவிக்கும் உடன்பிறப்புகள்.!

By Asianet TamilFirst Published Dec 7, 2021, 10:02 PM IST
Highlights

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படம் வைக்கப்பட்டதும் சர்ச்சையானது. 

மதுரையைத் தொடர்ந்து சென்னையில் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா படத்தின் மீது கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்களை திமுகவினர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வந்த அடுத்த இரு நாட்களிலேயே சென்னை கிழக்கு முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் புகுந்து ஜெயலலிதா படத்தை வைக்கக் கூடாது என்றும் அங்கிருந்த பெயர் பலகைகளை அடித்து நொறுக்கினர் திமுகவினர் சிலர். அந்தக் காணொலி காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து திமுகவுக்கு அது தர்ம சங்கடமானது. அம்மா உணவகத்தில் புகுந்து அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வராகப் பதவியேற்கும் முன்பே ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த விஷயத்தில் திமுகவை அரசியல் கட்சிகள் கண்டித்ததால், அம்மா உணவகம் பெயர் மாற்றப்படாது என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் அம்மா உணவகம் பெயரை மாற்ற முயற்சிப்பதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அம்மா உண்வகத்தில் ஆட்கள் குறைப்பு, இரவில் தக்காளிச் சாதம் என அம்மா உணவகத்தைப் பற்றி சர்ச்சைகள் இருந்தப்படியே உள்ளன. இந்நிலையில் அண்மையில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படம் வைக்கப்பட்டதும் சர்ச்சையானது. இதனையடுத்து மேலிட உத்தரவுப்படி அம்மா உணவகத்தில் இருந்து கருணாநிதி படம் அகற்றப்பட்டது. இதற்கிடையே கலைஞர் உணவகம் என்ற பெயரில் 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். அம்மா உணவகத்தின் பெயரை நீக்கும் முயற்சி இது அதிமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதனால், அம்மா உணவகம் சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

இந்நிலையில் சென்னை திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் மீண்டும் கருணாநிதி படம் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அங்கு ஜெயலலிதா உருவ படம் இருந்த நிலையில், அதை மறைத்து கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் படங்களை திமுகவினர் ஒட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் இரு தரப்புக்கும் சமரசம் செய்தனர். இதன்பின்னர் ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படம் அகற்றப்பட்டது. 

click me!