
மீன் விற்ற மூதாட்டியை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சமபவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வ மேரி என்ற வயது முதிர்ந்த மூதாட்டி, நாகர்கோவில் மற்றும் குளச்சல் மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலை மீன்களை தலையில் சுமந்து நாகர்கோவில் மற்றும் குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு இரவு மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் செல்வ மேரி கடந்த ஞாயிற்று கிழமையன்று மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
இவரை கண்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் அவர் மீது துர்நாற்றம் வீசுவதால் பேருந்தில் பயணிக்க முடியாது என கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்த மூதாட்டி விரக்தியில் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று இது என்ன ஞாயம் பேருந்தில் ஏறிய பொம்பளையை எப்படி இறக்கி விடலாம் பெட்டிசன் கொடுப்பேன் கத்தி கூச்சலிட்டதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டி தீர்த்தார். இறங்கி விட்ட நடத்துனரோ என்ன நடத்தது என்று ஒன்றும் அறியாதவர் போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நின்று கொள்ள அந்த மூதாட்டியோ "மீன் வித்திட்டா வர்றே நாறும் இறங்கு இறங்கு" என்று நடத்துனர் கூறியதாக தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்ததோடு வாணியக்குடி வரை நான் நடக்க வேண்டுமா என கண்கலங்கிய படியே பேருந்து நிலைய சுற்று சுவரில் சாய்ந்தபடியே நின்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துர்நாற்றம் வீசுவதாக மீனவ மூதாட்டி செல்வ மேரி பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.