தமிழகமே_அரங்கமாக_அதிர்ந்த.. "ஜெ.ஜெயலலிதா எனும் நான்"! தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்ற நாள் இன்று...

First Published May 23, 2017, 6:39 PM IST
Highlights
Jayalalithaa government first anniversary


அக்கா பால் பாயசம் செய்யட்டுமா, இல்ல சர்க்கரை பொங்கலா? கேட்க சசியும் வெளியே இல்லை,  சொல்ல ஜெயலலிதாவும் உலகில் இல்லை.
மிகச்சரியாக இன்றிலிருந்து ஒரு வருடம் முன்னதாக, இதே மே 23!...

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கட்டிடம் ஜொலிஜொலித்தது அன்று! ஜெயலலிதாவுக்கு விருப்பமான பச்சை உள்ளிட்ட சில நிற மலர்கள் மற்றும் செடிகளால் ஆன தோரணங்கள் அந்த பிரம்மாண்ட கட்டிடத்துக்கு ராஜ களையை கொடுத்தன. போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து பல்கலை கட்டடம் வரை மனிதசங்கிலி போல் அ.தி.மு.க. தொண்டர்கள் அணிவகுத்து நின்றனர்.

தலைமை நிலையத்தில் மகளிர் அணியின் பிராண்ட் குத்து டான்ஸில் துவங்கி, படுகர் சமுதாயத்தின் பாரம்பரிய நடனம் வரை வீதியெங்கும் ஆட்டம் ஆட்டம் கொண்டாட்டம்! ஜெயா தொலைக்காட்சி குழும சேனல்களின் அத்தனை கேமெராக்களும் இந்த நிகழ்வுகளை நொடி பிசகாமல் விழுங்கிக் கொண்டிருந்தன. என்ன விசேஷம் என்கிறீர்களா?! ஆம் அன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற நாள். அதுவும் தொடர்ந்து இரண்டாம் முறை என்பதுதான் இதில் ஹைலைட். 

ஜெயலலிதாவின் கார் கான்வாயானது, விழா மண்டபத்தை நோக்கி சீரான வேகமெடுத்த நொடியில் துவங்கியது அந்த ஆட்சி. இருபத்து எட்டு அமைச்சர்களுடன் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவின் கண்கள் நிஜமாகவே அன்று சற்று பனித்திருந்தன. காரணம், சர்வதேச அளவில் அரசியல் மற்றும் வாழ்க்கை சூழல் மாறிவிட்ட நிலையில் ஒரு பெரிய தேசத்தின் முக்கிய மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பை ஒரு கட்சியானது ஜனநாயக ரீதியிலான தேர்தலின் வழியாக தக்கவைத்து மீண்டும் பொறுப்பேற்பதென்பது அசாதாரணமான காரியம். மக்களின் அபிமானத்தால் மட்டுமே சாத்தியப்பட வாய்ப்புள்ள அந்த விஷயத்தை அ.தி.மு.க. சாதித்துக் காட்டிய பூரிப்புதான் அந்த சிறு துளி கண்ணீர். 

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் இந்த பதவியேற்பு விழாவானது அழுந்த செதுக்கப்பட்ட சம்பவம். காரணம்? இதே தமிழகத்தை பல முறை ஆண்ட தி.மு.க. தலைவரின் மகனும், இதே தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவரும் அதையெல்லாம் தாண்டி எதிர்கட்சி தலைவராக அமர இருப்பவருமான ஸ்டாலினும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு முன் வரிசையில் பிரதான இருக்கை வழங்கப்படாமல், பின்னே கிட்டத்தட்ட பதினைந்தாவது வரிசையில் இடம் தந்தது அதிர்ச்சி என்றால், இப்படி ஸ்டாலின் அவமானப்படுத்தப்பட்டதை விழா முடிந்த பின் அறிந்து கொண்டு ஜெயலலிதா வெளிப்படையாக வருந்தியது ஆச்சரிய அதிர்ச்சி. 

இப்படித்தான் ஆரம்பமானது ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சி. தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் படிப்படியாக மதுக்கடைகள் குறைப்பு விஷயம் சட்டென்று அமலுக்கு வந்தது. ‘அம்மான்னா அம்மாதான்யா!’ என்று மக்கள் கொண்டாட துவங்கினார்கள். 2011 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வரிசையாக தேர்தல் வெற்றியை மட்டுமே சுவைக்க துவங்கியிருந்த ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைத்த பெருமையில் ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்றார். பாவம் எதிரில் இருப்பவர்களை மட்டுமே தன் எதிரிகள் என்று அவர் நினைத்தது தவறு.

தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி என்பதால் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு ஆட்சி எனவும் சொல்லலாம் அதை. அதனால் புதிய சவால்கள் எதுவுமில்லாமல் சீராக போய்க் கொண்டிருந்தது நிர்வாகம். தினப்படி அரசியலை நகர்த்த வலுவான ஒரு பிரச்னை பிடிமானம் இல்லாமல் தவித்தனர் எதிர்கட்சிகள். இந்நிலையில் சென்னையில் சுவாதி கொலையோடு துவங்கிய் ‘ஒருதலை காதல் கொலை’ விவகாரம் தமிழகத்தில் ஆங்காங்கே தலை தூக்கி தேச அளவில் அதிர்ச்சியை கிளப்பியது.

சுவாதி கொலையின் குற்றவாளியான ராம்குமார் சிறையிலேயே திடீரென மரித்தபோது எதிர்கட்சிகள் எகிறிப்பாய்ந்தன. இப்படித்தான் சிறிதும் பெரிதுமான சலசலப்புகள், சந்தோஷங்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகளோடு கடந்து கொண்டிருந்தது தமிழகத்தின் நாட்கள். 

தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வினர் அம்மா புகழ் பாடுவதும், தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்வதுமாக நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. உள்ளாட்சி தேர்தலுக்கு அத்தனை கட்சிகளும் வரிந்துகட்டிக் கொண்டு தயாரான நேரம். 

செப்டம்பர் 23_ம்  நாள் தமிழர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நள்ளிரவில் உடல் சுகவீனமான நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டார் என்பதுதான் அது. அதன் பின் தமிழகத்தின் அத்தனை சாலைகளும் அப்பல்லோவை நோக்கி திரும்பின. கிரிட்டிகல் நிலையில் இருக்கிறார், லண்டன் டாக்டர் பீலே வருகிறார், அபாய கட்டத்தை தாண்டிவிட்டார், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகளுக்கு ஒத்துழைப்பு தருகிறார், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார், இட்லி சாப்பிடுகிறார், பொங்கல் சாப்பிடுகிறார், ஜெயா டி.வி.யில் சீரியல் பார்க்கிறார், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் லிஸ்டை வாங்கி வாசித்தார், அறைக்குள்ளேயே நடக்கிறார், அம்மா இஸ் பேக்_ கூடிய விரைவில் டிஸ்சார்ஜ் என்று எழுபத்து மூன்று நாட்கள் கண்கட்டி வித்தை காட்டியவர்கள் எழுபத்து நான்காவது நாள் (டிசம்பர் 5) அவரை பூத உடலாகத்தான் தந்தனர்.



ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோவை தாண்டும் முன் ஓ.பி.எஸ். மீண்டும் தமிழக முதல்வரானது, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ந்து சில நாட்களில் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரானது, ஓ.பி.எஸ். சசியின் காலில் விழுந்தது, பின் ஓ.பி.எஸ். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, சசி தமிழக முதல்வராக முயன்றது, சசி டீமுக்கு எதிராக புரட்சியை துவக்கி பன்னீர் செல்வம் கட்சியை பிளந்தது, சொத்து குவிப்பு வழக்கில் சசிக்கு சிறை தண்டனை உறுதியானது, கூவத்தூரில் சசி அணி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடைத்துவைக்கப்பட்டது, கட்சியின் துணைபொதுச்செயலாளராக தினகரனையும் கூடவே முதல்வராக எடப்பாடியையும் சசிகலா நியமித்தது, சசி சிறை சென்றது, கட்சியின் சின்னம் மற்றும் பெயர் முடக்கப்பட்டது, இரு அணிகளும் இணைவதற்காக சசி மற்றும் தினகரனை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாக எடப்பாடி அணி அறிவித்தது, சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் குற்றம்சாட்டப்பட்டு திகார் சென்றது, இரு அணிகளின் இணைப்பு முயற்சிகள் இழுத்து இழுத்து தோற்றுக் கொண்டிருப்பது, எடப்பாடி அரசின் அமைச்சர்கள் பலர் மீது வரிசையாக லஞ்ச புகார்கள் வெடித்துக் கொண்டிருப்பது, மக்கள் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த பன்னீர் தலைகீழாக சரிந்து கொண்டிருப்பது...என்று தெலுங்கு பட டிரெய்லர் போல் அ.தி.மு.க.வில் அதிரடி நிகழ்வுகள் உருண்டு கொண்டிருக்கின்றன. 

இன்று பா.ஜ.க.வின் பூதக்கண்ணாடி கண்காணிப்பின் கீழ் நத்தையாக வாய் மூடி நகர்ந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. கட்சியும் அதன் அரசும். 

ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று தலைமை செயலகம் விழாக்கோலம் பூண்டிருக்கும். கோட்டைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிதியமைச்சர் பன்னீர் செல்வம் பணிந்து வணங்கி பூங்கொத்து வழங்கியிருப்பார், ஜார்ஜே சென்னை சிட்டி கமிஷனராக இருந்திருப்பார், தினசரிகளில் அம்மாவின் அக்மார்க் புன்னகையுடன் பளிச் பஞ்ச் டயலக் விளம்பரங்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த இனிய நாளில் சசிகலாவும் ஜெயலலிதாவுக்கு போன் பண்ணி ‘அக்கா லஞ்சுக்கு வீட்டுக்கு வர்றீங்களா! கொஞ்சமா பால் பாய்சம் பண்ணட்டுமா இல்ல சர்க்கரை பொங்கல் பண்ணட்டுமா?!’ என்று கேட்டிருப்பார். 
காரணம்?...இன்று அ.தி.மு.க. ஆட்சி துவங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. 

click me!