இனி ஜெயலலிதாவின் 10,500 சேலை, 750 ஜோடி செருப்பு, 22 கிலோ தங்க நகைகள் என்னவாகும்?

First Published Dec 9, 2016, 2:54 PM IST
Highlights


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, 10 ஆயிரத்து 500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 500 ‘வொய்ன் கிளாஸ்’ ஆகியவை கர்நாடக நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கின்றன.

இவை எப்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும், அப்படி ஒப்படைக்கப்பட்டால், ஜெயலலிதாவின் போயஸ் வீட்டில் நினைவுப்பொருட்களாக வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1991-96-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது,  அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது.

அப்போது ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 10 ஆயிரத்து 500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 500 ‘வொய்ன் கிளாஸ்’ , தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்பின் அந்த வழக்கை கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பா.ஜனதாவின் சுப்பிரமணியசாமி தொடுத்த மனுவின் பேரில், அந்த வழக்கு கர்நாடாக நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின், அந்த பொருட்கள் பெங்களூருவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் அந்த பொருட்கள் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணமடைந்தார். இதையடுத்து, அவரின் 10 ஆயிரத்து 500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 500 ‘வொய்ன் கிளாஸ்’ தங்க நகைகள், ஆகியவை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து கர்நாடக மாநிலத்தின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா கூறுகையில், “ சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டபட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும், சசிகலா உயிரோடுதான் இருக்கிறார். விசாரணை தொடர்ந்து நடைபெறும். இந்த வழக்கின் தீர்ப்பு 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஜெயலலிதா இறப்பு குறித்து கர்நாடக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்படும்'' என்றார்.

கர்நாடாக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஏ.எஸ். பொன்னன்னா கூறுகையில், “ சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தீர்ப்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் கைப்பற்றப்பட்ட நகைகள், தமிழக அரசு மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 ஆயிரத்து 500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 500 ‘வொய்ன் கிளாஸ், ஆகிய பெங்களூரு நகர நீதிமன்றத்தின் முதல்தளத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 24 நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கருவூலத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 21.28 கிலோ தங்கநகைகள், ரூ.3.12 கோடி மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 கோடி மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளிவாள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின் இந்த சொத்துக்கள் குறித்து முடிவு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.

click me!