‘வாட் இஸ் திஸ்! நான் சி.எம்.ன்னு யானைக்குட்டிக்கு தெரியுமா? மனிதர்களை விட விலங்குகளை நம்பிய ஜெ.,!

First Published Dec 5, 2017, 2:39 PM IST
Highlights
Jayalalitha Narrow escape from an Elephant attack at Mudumalai


தமிழக அரசியலில் நக்கல், நய்யாண்டியில் பி.ஹெச்.டி. முடித்தவர் அந்த மாஜி காங் தலைவர். ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தியபோது ‘ஒருவேளை தன்னைப்போல் இருப்பதால் யானைகள் மேல் அந்த அம்மையாருக்கு பிரியம் வந்திருக்கலாம்.’ என்று கேட்பவர்கள் காது புளிக்கும் வகையில் போட்டுத் தாக்கினார் மேடை மேடையாக. 

அதேபோல் ஜோஸியர்கள் சொன்னதால்தான் விநாயகரின் வடிவமான யானைகளுக்காக விழுந்து விழுந்து செய்கிறார் ஜெ., என்றும் ஒரு விமர்சனம் இருந்தது. ஆனால் உண்மையில் தனக்கு விலங்குகளிடம் அதீத பாசமுண்டு, அதிலும் யானையென்றால் தனக்கு உயிரென்று அதன் முரட்டுத்தனத்துக்கு ஆளாகி நிரூபித்தார் ஜெயலலிதா.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம், முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தவாறே அரசுப் பணிகளை கவனித்து வந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென முதுமலை தெப்பாக்காட்டில் உள்ள யானைகள் முகாமுக்கு செல்ல வேண்டுமென ஆசைப்பட்டார். மளமளவென ஏற்பாடுகள் நடந்தேறின. அங்கே சென்றவர் யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கினார். பின் அந்த முகாமிலுள்ள குட்டி யானைக்கு தன் கையால் உணவு வழங்க ஆசைப்பட்டார். 

குட்டியை முதல்வர் அருகில் அழைத்து வந்தனர். அதன் நெற்றியிலிருந்த புசுபுசு முடியும், அதன் துறுதுறு தலையாட்டலும் இயல்பிலேயே யானை விரும்பியான ஜெ.,வை குதூகலிக்க வைத்தன. அதற்கு அவர்  கரும்பு ஊட்ட முயல, அதை உண்ண வாயை திறந்த யானைக்குட்டி பின் அப்படியே தனது துதிக்கையை அவர் மேல் தளர்த்தி சட்டென சில அடிகள் குறும்புத்தனமாக முன்னேறிவிட்டது. இந்த திடீர் முரட்டுப் பாசத்தால் முதல்வர் சற்று நிலைகுழைந்து போனார். அவரது உடலில் சில பாகங்களில் யானையின் அழுத்தம் இறங்கிவிட்டது. ஆனால் சட்டென்று சுதாரித்த பாதுகாவலர்கள் யானையிடமிருந்து அவரை பாதுகாப்பாக நகர்த்திவிட்டனர். 

அதிகாரிகள் யானை பராமரிப்போர் மீது டென்ஷனாகி, யானைக்குட்டியை சற்று பலவந்தமாக தள்ளிக்கொண்டு செல்ல உடனே அதிகாரிகள் மீது டென்ஷனான ஜெ., ‘வாட் இஸ் திஸ்! நான் சி.எம். அப்படின்னு யானைக்குட்டிக்கு தெரியுமா? இட்ஸ் அன் இன்னொசெண்ட் ஸோல்.’ என்று யானைக் குட்டிக்காக பரிந்து பேசி அதை அழுத்தத்திலிருந்து காப்பாற்றினார். 

இருந்தாலும் யானையின் குறும்பினால் படபடப்பிலிருந்த அவரை கோடநாடு திரும்பலாமென்று உயரதிகாரிகள் அட்வைஸ் செய்தனர். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் முதுமலை சென்று கார்குடி அருகே ஸ்பெஷல் சஃபாரி சென்றார். 

விலங்குகள் மீது அவர் வைத்திருந்த அன்பின் ராசியோ என்னவோ புலி, கடமான்கள், கரடி என்று கிட்டத்தட்ட வனத்தின் மிக முக்கிய விலங்குகள் அத்தனையும் முதல்வருக்கு தரிசனம் தந்தன. 

இதுதான் ஜெ! சிம்பிளாக சொல்வதென்றால், அவர் மனிதர்களை விட விலங்குகளை நம்பினார், காதலித்தார். 

click me!