
இரு அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக பிளந்த அதிமுக , சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் சிறைக்கு சென்ற பின், சசிகலா அணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார்.
இதனிடையே ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணிகள் இணைய வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மத்தியில் ஆளும் பாஜக முன்னிலையில் இரு அணிகள் இணைப்பு குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.
அதே நேரத்தில் இரு அணிகள் இணைவதற்கு, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று இரு தரப்பினரும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தினர். இதனிடையே இன்று அல்லது நாளை இரு அணிகள் இணைப்பு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ஜெ. சமாதி இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து விரைவில் இணைப்புப் படலாம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.