ஜெயலலிதா மீது திடீர் கரிசனம்... புகழ்ந்து தள்ளிய ஈவிகேஎஸ் இளங்கோவன்...!

By vinoth kumarFirst Published Mar 24, 2019, 2:47 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது என்றார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, அமமுக கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் தமிழகம் திரும்பி பார்க்கும் தொகுதியாக தேனி தொகுதி மாறியுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து, அதிமுகவில் இருந்து பிறந்த டிடிவி தினகரன் அணி சார்பில் முன்னாள் ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ தங்கத்தமிழ்செல்வன் களமிறங்கி உள்ளார். அதே வேளையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தேனி  தொகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி தொகுதி வேட்பாளர்களை நான் பெரிய போட்டியாக கருதவில்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவனல்ல அல்லது கிளி ஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல நல்ல மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கிறேன்.

மேலும் பிரதமர் மோடி மீது மக்களுக்கு கோபம் இருப்பதால் பாஜக கூட்டணி தோற்கும் எனவும் கூறினார். என்னை தேனி தொகுதியில்  போட்டியிட வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருக்கிறார். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது.

ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

click me!