சிவகங்கையில் சிதம்பரத்துக்கு சிக்கல்... ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பதவி என ராகுல் முடிவு!

By Asianet TamilFirst Published Mar 24, 2019, 2:44 PM IST
Highlights

ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவிதான் என்ற காங்கிரஸ் மேலிட கொள்கையால் சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவகங்கை நீங்கலாக மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சிவகங்கை தொகுதிக்கு எப்போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 
ப. சிதம்பரம் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். எனவே, சிவகங்கை தொகுதியை அதே குடும்பத்துக்கு வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் சிவகங்கை தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி கேட்டுவருகிறார். இதனால், சிவகங்கை தொகுதி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்துவருகிறது.
இந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார். “காங்கிரஸில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி என்பதை ராகுல் காந்தி கடைபிடித்துவருகிறார். இதன் காரணமாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. இந்தியா முழுவதும் இதுபோல பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கேட்டுவருகிறார்கள். அவர்களிடம் ராகுல் பேச உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் குடும்பத்துக்கு சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்கையில் ராகுல் உறுதியாக இருந்தால் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சீட்டு கிடைக்காமலும் போகலாம். மேலும் சுதர்சன நாச்சியப்பனுக்கு தொகுதி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

click me!