
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஆணையத்திடம் இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக 25 பிரமாணப் பத்திரங்களும், 70க்கும் மேற்பட்ட புகார் கடிதங்களும் வந்துள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. சென்னை எழிலகத்தில் உள்ள கலச மஹாலில் இயங்கி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்களில் 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சம்மன் அனுப்பப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சம்மன் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும். அதனால் தற்போதைக்கு வெளியிட முடியாது என்றார் அவர்.