
ஊர்ப்பக்கம் நக்கலாய் ஒன்று சொல்வார்கள்...’விதை விதைச்சு வெள்ளாம பண்ணுனது வெள்ளயப்பன் அதை நோகாம அறுவடை பண்ணி தின்னுறது திண்ணையப்பனா?’ என்று. கிட்டத்தட்ட அப்படியொரு கதைதான் கோயமுத்தூரில் தி.மு.க.வுக்கு நடந்திருப்பதாக சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதாவது தமிழ் செம்மொழிமாநாடு கோயமுத்தூரில் நடந்தபோது அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்ததாம் கருணாநிதியின் அரசு. அதில் ஒன்றுதான் அங்கிருக்கும் காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பும். அதற்கான அடிப்படை பணிகள் ஆரம்பமான நிலையில் ஆட்சி மாறிவிட்டது. பின் மெதுவாக துவக்கப்பட்ட அந்த பணி முடிவடைவதற்குள் மீண்டும் பொது தேர்தல் வந்துவிட்டது.
ஆனால் மீண்டும் ஆட்சியில் வந்தமர்ந்தது அ.தி.மு.க. அரசாங்கம். பின் பாலத்தின் முதல் அடுக்குப் பணியை முடித்து சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைத்திருக்கிறார்.
நேற்று நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அந்த பாலத்துக்கு ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்’ என அறிவித்தார் முதல்வர்.
இதைக்கேட்டுதான் டென்ஷன் ஆகியிருக்கிறாராம் ஸ்டாலின். தங்கள் கட்சி சீனியர்களிடம் இது பற்றி ஆதங்கமாய் பேசியிருக்கிறார். இதை ஆமோதிக்கும் அக்கட்சி முக்கியஸ்தர்கள் ‘அந்தப் பாலத்தை திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, அடிப்படை பணிகளை துவக்கியது நாங்கள். கோயமுத்தூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தொலைநோக்குப் பார்வையுடன் கணித்து அதற்கு தீர்வு சொல்லும் விதமாய் அந்த பாலத்தை கட்ட வடிவமைத்தோம்.
ஆனால் அ.தி.மு.க.வோ அதை சிலரது வசதிக்கேற்பட் மாற்றி வடிவமைத்து அவசரமாய் கட்டி முடித்திருக்கிறது. இப்போது பாலத்தின் முதலடுக்கு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் அது போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதாய் கைகொடுக்கவில்லை என்று வெளிப்படையாய் மக்கள் விமர்சிக்கிறார்கள்.
இந்நிலையில் அந்த பாலத்துக்கு தங்களின் கட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரையும் சூட்டுகிறோம் என்று முதல்வர் சொல்வது ஏற்கக்கூடியதல்ல. மிக தவறான முன்னுதாரணம். கஷ்டப்பட்டு திட்டத்தை கொண்டு வந்தது நாங்கள்! ஆனால் பெயரெடுப்பது அவர்களா?” என்கிறார்கள்.