
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவிப்புக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குகளைச் சிதற வைக்கவே, விஷால் வேட்பாளராக களமிறங்கி உள்ளதாகவும், இதற்கு பின்னணியாக தினகரன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் விஷாலுக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவருக்கு எதிராகவும் அரசியல் கட்சியைச் சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களிடம் இருந்தே எதிர் கருத்துக்கள் எழுந்து வருவதாக தெரிகிறது. நடிகர் விஷால் ஏற்கனவே, நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஷால், அரசியல் பிரவேசம் செய்துள்ளது, தயாரிப்பாளர் சங்கத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் சார்பற்று செயல்பட்டு வருவது தயாரிப்பாளர் சங்கம் என்றும், அதில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது என்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் ரகசியமாக விவாதித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால், சென்னை, ஆர்.கே.நகர் இடை தேர்தலுக்கான இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது குறித்து, டிடிவி தினகரன், விஷால் என் நண்பர்தான். ஆனால், நான் சொல்லி விஷால் போடடியிடவில்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் பேசும்போது, விஷால் உட்பட யார் போட்டியிட்டாலும் என்னோட வெற்றியை பாதிக்காது என்றார். அம்மா வேட்பாளராகிய எங்களது வெற்றி பாதிக்கப்படாது என்றும் கூறினார்.
விஷால், என்னுடைய நண்பர்தான் என்றும் அவருடன் அடிக்கடி போனில் பேசுவேன் என்றும் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில், நான் சொல்லி அவர் போட்டியிடவில்லை என்றும் விஷாலின் அறிவிப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.