ராதாகிருஷ்ணனை குறி வைக்கும் அ.தி.மு.க...! திடுக்கிட வைக்கும் காரணம் இது தான்...!!

By Selva KathirFirst Published Jan 9, 2019, 9:35 AM IST
Highlights

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை குறி வைத்து அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் காய் நகர்த்தி வருவதன் பின்னணி திடுக் ரகமாக உள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை குறி வைத்து அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் காய் நகர்த்தி வருவதன் பின்னணி திடுக் ரகமாக உள்ளது.

கடந்த வாரம் விழுப்புரத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அப்பலோ மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்ற கொளுத்திப் போட்டார். அதிலும் ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் கூறியது தான் ஹைலைட். 

மேலும் ஜெயலலிதா மரணத்தை மர்ம மரணமாக பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சண்முகம் கூறினார். இதனை ஆமோதித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிலருக்கு போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தால் தான் உண்மை வெளிவரும் என்று அதிரடி கிளப்பினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மனதில் வைத்து தான் ஜெயக்குமார் இப்படி பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. 

 

இதனை அடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கூடி அமைச்சர்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் கொந்தளித்த சி.வி.சண்முகம், அதிகாரிகள் அடக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அடக்க நேரிடும் என்கிற ரீதியில் பேசி மீண்டும் பரபரப்பாக்கினார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டி அளித்தனர். 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னணியில் தினகரன் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் பகிரங்கமாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் மல்லுகட்டுவதன் பின்னணி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தான் என்கிறார்கள். அதாவது இதுவரை நடந்த விசாரணையில் சசிகலா குடும்பத்தை சிக்கலில் சிக்க வைக்கும் நபராக கருதப்படுபவர் ராதாகிருஷ்ணன் மட்டும் தான். 
 
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்பதால் தான் அவர் காலமாகிவிட்டார் என்று விசாரணை ஆணையம் ஒரு முடிவுக்கு வர தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை நோக்கியே கடந்த சில நாட்களாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லவிடாமல் தடுத்தது யார்-? என்கிற கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சசிகலாவை கை காட்ட வேண்டும் என்று விரும்புகிறது அ.தி.மு.க. 

ஆனால் ராதாகிருஷ்ணனோ அப்படி ஒரு பிரச்சனையே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எழாத நிலையில் அபாண்டமாக பேச முடியாது என்பதை முதலில் இருந்தே கூறி வருகிறார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே அவரை மிரட்டும் தொனியில் அ.தி.மு.க அமைச்சர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், இதன் பிறகு உங்கள் முடிவு என்று முதலமைச்சரையும் நேரில் சந்தித்து ராதாகிருஷ்ணன் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

click me!