பாஜக இல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை யார் செய்தாலும் வரவேற்கதக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் அந்த அணியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்தும், மகளிர் தின விழா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் இரண்டாவது கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, செம்மலை ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மண்டல வாரியாக கருத்து கேட்பு
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்ன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மண்டல வாரியாக மக்களை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளது. பொதுநல அமைப்புகள், கட்சி சாராத அமைப்புகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு தலைசிறந்த சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுச்செயலாளர் ஆணையிட்டார். அதன் படி நாளை முதல் தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் அறிக்கை தயாரிப்பு குழு நேரில் சென்று விவரங்களை சேகரிக்க உள்ளதாக தெரிவித்தார்.
பாஜக இல்லாத கூட்டணி
அப்போது அதிமுக, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை ஜி.கே.வாசன் தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவுடன் - பாஜக இல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை யார் செய்தாலும் வரவேற்கதக்கது. சில பெரிய கட்சியான எங்களுடன் கூட்டணிக்கு பேசி வருகிறார்கள். அதையெல்லாம் தற்போதுவெளியில் சொல்ல முடியாது தேர்தல் நெருக்கத்தில் அறிவிப்போம் என கூறினார்.
இதையும் படியுங்கள்