இதெல்லாம் ஒரு வெற்றியா..? வேலூர் தேர்தலில் ஜெயிச்சது அதிமுகதான்... ஜெயக்குமாரின் அடடே விளக்கம்!

By Asianet TamilFirst Published Aug 9, 2019, 10:10 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி வாக்குகளைப் பெற்றனர். இப்போது ரூ. 125 கோடி செலவு செய்து  வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

வேலூர் தேர்தலில் பழம் நழுவி பாலில் விழும் என நினைத்திருந்தோம். அது நழுவி கீழே விழுந்துவிட்டது. அடுத்த முறை நிச்சயம் பாலில் விழும் என்று தமிழக ஜெயக்குமார் தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதல் காலை 11.45 மணி வரை ஏ.சி. சண்முகவே முன்னிலையில் இருந்துவந்தார். ஆனால், அதன்பிறகு முன்னிலைப் பெற தொடங்கிய கதிர்வேல், இறுதிவரை முன்னிலை பெற்று வெற்றியை ருசித்தார். ஆனால், கடைசி வாக்கை எண்ணி முடிக்கும் வரை யார் வெற்றி பெறுவார் என்பதில் இழுபறி நீடித்தது.


 நாடாளுமன்றத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக. இந்த முறை நூலிழையில்தான் வெற்றியை ருசித்தது. அதிமுக கடும்போட்டி அளித்து தோல்வி அடைந்ததை, அதிமுகவினர் பெருமையாகப் பேசிவருகிறார்கள். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

 
“அதிமுகவை பொருத்தவரை இத்தேர்தலில் நாங்களே வெற்றியாளர்கள். திமுக பணநாயகத்தை நம்பியது. அதைக் கொடுத்து வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக பெற்ற வெற்றியை மோசமான வெற்றி அல்லது மோசடியான வெற்றி என சொல்லலாம்.  நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி வாக்குகளைப் பெற்றனர். இப்போது ரூ. 125 கோடி செலவு செய்து  வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதெல்லாம் ஒரு வெற்றியா?


மக்கள் மனங்களில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது. திமுக தேய்பிறையாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவோ வளர்பிறையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. வேலூர் தேர்தலில் பழம் நழுவி பாலில் விழும் என நினைத்திருந்தோம். அது நழுவி கீழே விழுந்துவிட்டது. அடுத்த முறை நிச்சயம் பாலில் விழும்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 

click me!