தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை
சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னும் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் கொண்டு வந்திருக்க வேண்டும் எனவும், ஆனால் அரசு அதனை செய்ய தவறிவிட்டதாகவும், சென்னை மழையில் இருந்து அரசு பாடம் கற்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மக்கள் மீது அக்கறை இல்லை
முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் மீது அக்கறை கொண்டு முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை எனவும், இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு செல்லும் வேளையில் போகிற போக்கில் பிரதமரை சந்திக்கிறார். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பதிலளித்தார். ஓ.பி.எஸ் அணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ஓ.பி.எஸ் தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் எனவும், அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்