கஞ்சா, போதை மருந்துகளின் கூடாரமாகத் திகழும் தமிழ் நாட்டை கலாச்சார சீர்கேட்டின் உறைவிடமாக மாற்ற அரசாணை வெளியிட்டுள்ள தி.மு.க. அரசுக்குக் கண்டத்தை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக மக்கள் இதற்கு தக்க பதிலடி வழங்குவார்கள் என கூறியுள்ளார்.
கல்யாண மண்டபத்தில் மது விநியோகம்
கல்யாண மண்டபங்களில் மதுபான விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசிதழ் வெளியிடப்பட்டிருப்பதற்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியில், சாராய கடைகளைத் திறந்து தமிழக இளைஞர்களை குடிகாரர்களாக உருவாக்கினார். மதுவிலக்கே ஒற்றை இலக்கு என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த விடியா அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கு நிர்ணயித்து மதுபான விற்பனையை கன ஜோராக நடத்துகிறது. இன்று. அதன் உச்சகட்டமாக திரு. ஸ்டாலின், கல்யாண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், விழா அரங்கங்கள் ஆகியவற்றிலும் மதுபானக் கூடங்களை அமைக்க எப்.எல். 12 உரிமம் வழங்கி, தமிழக குடும்பங்களை கலாச்சார சீரழிவிற்கு அழைத்துச் செல்லும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளார்.
குடிபோதையில் மக்கள்
"தனக்கும் தன் குடும்பத்திற்கும் நல்லது நடக்கவில்லை என்றால், இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று வசனம் எழுதிய கருணாநிதியின் மகன் திரு. ஸ்டாலின் இன்று தமிழ் நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை கொண்டு வருவோம்; எங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடுவோம்” என்றெல்லாம் வாய் நீளம் காட்டியவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கு நிர்ணயித்து மதுபான விற்பனையை கன ஜோராக நடத்துகிறார்கள். ஏற்கெனவே, ஆளும் விடியா திமுக அரசு சட்ட விரோதமாக லைசென்ஸ் பார்களை நடத்தி கொள்ளை அடிக்கிறது. கிராமந்தோறும் சந்துக் கடைகளை அமைத்து அங்கிங்கெனாதபடி தமிழகமெங்கும் குடிபோதையில் தமிழக மக்களை மூழ்கடித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சர்வாதிகாரத்தின் உச்சகட்டம்.
தடுக்கி விழுந்தால் மதுபானக் கூடங்கள் என்ற நிலையில், தாய்மார்கள் சாலைகளில் நடந்துசெல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஏற்கெனவே பெண்கள், டாஸ்மாக் கடைகளை அகற்றச் சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டைக் கெடுக்க பலவழிகளில் முயலும் இந்த விடியா அரசு, புனிதமான திருமணங்களோ, திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டுக்களோ உருப்படியாக நடக்கக்கூடாது என்ற கேவல புத்தியோடு இந்த அரசாணை வெளியிட்டுள்ளதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், மது அருந்த அனுமதி அளித்து அரசாணை ஒன்றை இந்த விடியா திமுக அரசு பிறப்பித்துள்ளது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம்.
பதிலடி வழங்கும் மக்கள்
திருமண விழாக்களில் காலங்காலமாக நாம் கடைபிடித்து வரும் நாகரீகத்தையும், பண்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் மேலைநாட்டு கலாச்சாரத்தை தாய் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் விபரீத விளையாட்டை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாது. ஏற்கெனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
பள்ளி மாணவியரும் மதுவுக்கு அடிமையாகியுள்ள செய்திகள் பல வெளிவந்துள்ளன. இந்நிலையில் தமிழக மக்களை சீரழிக்கும் இந்த விபரீத உத்தரவை உடனடியாக இந்த திராவக மாடல் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதிகாரம் இருக்கிறது எதையும் செய்வோம்' என்ற மமதையில் செயல்பட்டால், தமிழக மக்கள் இதற்கு தக்க பதிலடி வழங்குவார்கள் என்று எச்சரிப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்