நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்புக்கு ஆங்கீகாரம் அளித்துள்ள நிலையில், அதிமுக கொடி மற்றும் பெயரை தவறாக பயன்படுத்தும் ஓ.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டதையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக ஓபிஎஸ் சட்ட போராட்டங்கள் நடத்தினார். இருந்த போதும் எடப்பாடி பழனிசாமியிடம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகளவு இருந்த காரணத்தால் ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் அதிமுகவின் பெயர், கொடி, தலைமை அலுவலக முகவரி போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பினர் கட்சியின் கொடி, பெயர், சின்னம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையின் முகவரியை லெட்டர்பேடில் பயன்படுத்துவது என்பது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எந்த வகையிலும் அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாத நிலையில், அவர்கள் அதிமுக கொடியையோ, கட்சி பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளதாக தெரிவித்தார். ஆனால் வேண்டுமென்றே அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இரட்டை இலை சின்னத்தை தவறாக பயன்படுத்தியாக கர்நாடக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். இதனையடுத்து உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதே போல தமிழக காவல்துறையும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்