டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது தொடர்பாகவும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
கள்ளச்சாரய மரணம்- பாஜக போராட்டம்
தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நடந்த நிகழ்வுகளையடுத்து இவற்றை திமுக அரசு தடுக்க தவறிவிட்டதாக கூறி தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் "தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடை! ஊர்கள் தோறும் கள்ளச் சாரயம்" எனும் தலைப்பில் திமுக அரசை கண்டித்து பாஜக மகளிர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் ம்த்தியில் பேசிய அவர், தமிழகத்தில் மது என்பது வாழ்க்கையின் எல்லா பக்கத்தையும் சூழ்ந்து வருகிறது . சென்ற வருடம் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் 44 ஆயிரம் கோடி ரூபாய்.இந்தியாவில் அதிகமாக மதுவை விற்று சம்பாதித்த அரசு திமுக அரசு தான்.
சொந்த தொகுதியில் நின்று டெபாசிட் வாங்க முடியுமா? காமராஜ்க்கு வைத்திலிங்கம் சவால்
அமைச்சர் மஸ்தான் உடன் தொடர்பு
திமுக அரசு பொறுப்பேற்று ஒரே ஆண்டில் 22 விழுக்காடு டாஸ்மாக் வருமானம் பெருகியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இந்த அளவிற்கு ஒரே ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ஏறியது இல்லை. கள்ளச்சாராயம் என்று ஒன்று இருப்பதால்தான் அதை தேடி சிலர் செல்கின்றனர். டாஸ்மாக்கில் குடித்து அதற்கு அடிமையானவர்கள் தான் பணம் இல்லாத காரணத்தினால் ஒரு கட்டத்தில் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களில் மருவூர் ராஜா என்பவர் கைது செய்யபடுள்ளார் இவர் திண்டிவனம் பகுதி திமுக கவுன்சிலர் ஒருவரின் கணவர் அதோடு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் நெருங்கிய தொடர்பு உடையவர்.
செந்தில் பாலாஜியை நீக்கனும்
கள்ளச்சாராயம் விற்று கைதான அமாவாசை என்னும் நபர் தானும் கள்ளச்சாராயம் குடித்து விட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அவருக்கும் இந்த அரசு 50000 இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த அமாவாசையின் சகோதரர் சித்தாமூர் திமுகவின் ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கிறார். திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள், திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள். இன்று காலை பாஜக சார்பில் மகளிர் மட்டுமே அடங்கிய குழுவினர் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆளுநருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கை வைக்கப்படும். அதோடு கள்ளச்சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய பலருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சரை சந்திக்கும் பாஜக குழு
டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளோம். 44000 கோடி அரசுக்கு நஷ்டம் இல்லாமல் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் நிச்சயம் இடம் பெறும். நாங்கள் கொடுக்கக் கூடிய வெள்ளை அறிக்கை வைத்துக் கொண்டு தமிழகத்தில் எந்த அமைச்சர் உடனும் விவாதத்திற்கு தயாராக உள்ளோம்.
இதையும் படியுங்கள்