
குருமூர்த்தி என்ன தேவதூதரா? என்றும், அவர் சொல்கிறபடி எல்லாம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறாது என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் 48-வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும், தமிழக அரடிசயலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல் என்றும் கழக கட்சிகளைபோல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது என்றவர் கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருவதாக தெரிகிறது என்றார்.
அதேபோல் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டும் என்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது என்றும், அவரைப் போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
திமுக மற்றும் அதிமுகவால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற அவர், இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏ.வில் உள்ளது என்றும் குருமூர்த்தி கூறியிருந்தார். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை மறக்கடித்து உள்ளனர். ஆன்மீகம் என்றால் என்ன? என்பதை விளக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என பல்வேறு விஷயங்கள் குறித்து குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு குறித்து, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அமைச்சர், திமுக தொடர்பாக குருமூர்த்தி தெரிவித்த கருத்துடன் உடன்படுகிறேன் என்றார். திருக்குறளில் சொல்லாதது ஒன்றும் இல்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்பே, வாழும் நெறிகளை திருவள்ளுவர் அழகாக கூறியுள்ளார். திருக்குறளை உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களும் படித்து அதன்படி நடந்தாலே உலகம் அமையாக வாழக்கூடிய நிலைமை உண்டாகும். அவர் தமிழர் என்பதில் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் நாவை அடிக்கி வைப்பது என்பது, அவர் கூறியதில் முக்கியமானது. குருமூர்த்தி என்ன தேவதூதரா? அவர் கூறியது போல ஆட்சி மாற்றம் வராது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்து தற்போதைய ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.