
ரஜினியுடன், பாஜக இணைந்து செயல்படவேண்டும் என குருமூர்த்தி கூறியிருப்பதை பரிசீலனை செய்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி தெரிவித்தார்..
சென்னை ஆழ்வார்பேட்டையில் துக்ளக் இதழின் 48-வது ஆண்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், "ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது.
கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல். கழக கட்சிகளைபோல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை அது காட்டுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டுமென்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது.
இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டிஎன்ஏவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்து உள்ளனர். ஆன்மிகம் என்றால் என்ன? என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்நிலையில், குருமூர்த்தியின் கருத்து குறித்து பதிலளித்த பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா, அவரின் கருத்தைப் பரிசீலிப்போம் என்று கூறியிருக்கிறார்.