
துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழவில் பேசிய குருமூர்த்தி, பகிரங்கமாக பாஜக ஆதரவை நிலையை எடுத்துள்ளதாகவும், அவர் பாஜக சங்பரிவார் அமைப்புகளின் குரலாகவே ஒலிப்பதாக தெரிவித்துள்ள எழுத்தாளர் ஞாநி, அவர் குறித்து முழுக்க அம்பலமானால்தான மக்களுக்கு புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
எழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ஞாநி தன் மனதில் பட்டதை துணிச்சலாக சொல்பவர். இடது சாரி சிந்தனை கொண்ட அவர், மதவாத அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
அவருக்கு சிறுநீர கோளாறு இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்படுவார். நேற்று மாலையில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், குஜராத் மாநிலத்தின் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை ஒரு விழாவில் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கே.கே.நகர் இல்லத்துக்கு வந்த ஞானி, தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிகளை பார்த்துள்ளார். உடனடியாக அதற்கு ரிஆக்ட் செய்த ஞாநி தனது முகநூல் பக்கத்தில் அது குறித்து பதிவு செய்துள்ளார்.
அதில் துக்ளக் ஆண்டுவிழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன், சோ இவ்வளவு பதிரங்கமாக பாஜகவை ஆதரிக்க மாட்டார்… குருமூர்த்தி அப்படி இல்லை.. முழுக்க முழுக்க பாஜக சங்பரிவாரங்களின் குரலாகவே ஒலிக்கிறார்…முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்கு அது தெரியும் என தெரிவித்துள்ளார்.
தனது வாழ்நாள் இறுதிவரை பாஜக மற்றும் சங்பரிவாரங்களுக்கு எதிராகவே செய்லபட்டு வந்தார். தற்போது ஞாநியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஞாநியின் உடல் சென்னை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.