Jai Bhim:கனலரசா உன்ன சும்மா விடமாட்டோம்.. காடு வெட்டி மகனை எச்சரித்த கே.ராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2021, 4:43 PM IST
Highlights

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கூட சித்தரித்து ஒரு படம் எடுத்தார்கள். ஆனால் அதை அவர் அதை பொருட்படுத்தவே இல்லை, ஆனால் இவர்கள் மனதளவில் காயப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்,

நடிகர் சூர்யாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் காடுவெட்டி குரு மகன் கனலரசனை சும்மா விடமாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் எச்சரித்துள்ளார். நீங்கள் சூர்யாவை தாக்கும்வரை  நாங்கள் வேடிக்கை பார்த்திக்கொண்டிருப்போமா என்றும், சினிமா தொழிலாளர்கள் இறங்கினால் நீங்கள் தாங்க மாட்டீங்க என அவர் எச்சரித்துள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் மாறிமாறி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஜெய் பீம் திரைப்படத்தில் ஆக்னி சட்டி காலண்டர் வைத்தது தவறுதான் என்றும், சூர்யா வருத்தம் தெரிவித்தால் பிரச்சனை முடியும் என்றும், அதேபோல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதை மன்னித்தருள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவாக இருந்தாலும் அனைத்திற்கும் இயக்குனர்தான் பொறுப்பாவார். எனவே பாமகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு படத்தின் இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுவே போதுமானது, இதற்கு சூர்யா தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவசியமில்லை. பாமக இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கூட சித்தரித்து ஒரு படம் எடுத்தார்கள். ஆனால் அதை அவர் அதை பொருட்படுத்தவே இல்லை, ஆனால் இவர்கள் மனதளவில் காயப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், அதற்காக இப்போது வருத்தமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த பிரச்சினையை இத்துடன் முடிந்து விட வேண்டும், இப்போது பாமகவினர் சூர்யாவை தாக்குவோம் என்று பேசுகின்றனர், ஏற்கனவே வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ராமதாஸ் அதிக கெட்ட பெயர் சம்பாதித்தார். அதனால் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் அவர் ஒதுங்கி இருக்கிறார். மீண்டும் அவரது கட்சியின் தொண்டர்கள் வன்முறையாக பேசக்கூடாது. நீங்கள் அப்படி செய்தால் சட்டம் வேடிக்கை பார்க்காது, இப்போது இருக்கிற முதல்வர் அதை விரும்ப மாட்டார். ஆனால் புதிதாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கைகால் எடுப்போம் என கூறுகிறாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ராஜன். அவர் பேசுவதெல்லாம் அக்கிரமத்தின் உச்சம். இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு ஒரு நல்ல ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் பேசுவது தவறான அராஜக வார்த்தைகள். நீங்கள் கை கால் எடுத்து விட்டால் உங்களைச் சும்மா விட்டுவிடுவார்களா? சினிமா துறையுலகம் உங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா.? சூர்யாவுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தமிழ் துறைகளையும் சும்மா இருக்காது. எங்கள் தொழிலாளிகள் இறங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் அவர் எச்சரித்துள்ளார்.
 

click me!