ஜெ. சமாதியில் நிதிநிலை அறிக்கை வைத்த அமைச்சர் மீது நடவடிக்கை தேவை - ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 10:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
ஜெ. சமாதியில் நிதிநிலை அறிக்கை வைத்த அமைச்சர் மீது நடவடிக்கை தேவை - ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சுருக்கம்

J. The need for action on the budget of the mausoleum which Minister Governor Urges Callisto

ஜெயலலிதா சமாதியில் நிதிநிலை அறிக்கையை வைத்து சட்டப்பேரவை மாண்புகளை சீர்குலைத்த நிதியமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார், இன்று காலை பேரவையில் தாக்கல் செய்தார். முன்னதாக, தனது வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பிய ஜெயக்குமார், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று நிதி நிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்றைய தினம் தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.

2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை ஜெயலலிதாவின் சமாதியில் முதலில் வைத்து, பிறகு அதை அங்கிருந்து எடுத்து வந்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிதிநிலை அறிக்கையின் புனிதத்தையும், சட்டமன்ற, அரசியல் சட்ட மாண்புகளையும் அடியோடு குழி தோண்டி புதைத்து விட்டார்.

இந்த அரசியல் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நிதியமைச்சருக்கு தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆளுநர் குறிப்பிடும் நாளன்று பேரவையில் அளிக்கப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 181(1) தெளிவாக விளக்கியிருக்கிறது.

பேரவை என்பது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைதான். சமாதிகளை பேரவையாக கருத முடியாது.

அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொள்வேன் என்று ஆளுநர் முன்பு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள நிதியமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற பேரவை விதிகளையும், அரசியல் சட்டத்தையும் மீறியது கவலையளிக்கிறது.

நிதிநிலை அறிக்கையை முதலில் சமாதியில் வைத்து விட்டு பிறகு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல- சட்டமன்ற ஜனநாயகத்தையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கும் செயல்.

பேரவையில் தாக்கல் செய்யப்படும் வரை நிதிநிலை அறிக்கை பற்றிய ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது மரபு.

ஆனால் அந்த மரபுகளையும் மீறி, நிதி நிலை அறிக்கையை சமாதி வரை எடுத்துச் சென்ற நிதியமைச்சர் ஜெயக்குமார், தான் எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணம் மட்டுமல்லாமல் அமைச்சராகும் போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தையும் மீறிவிட்டார்.

பேரவை மாண்புகளை சீர்குலைத்து அரசியல் சட்டத்தை மீறிய நிதியமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக பொறுப்பு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!