
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள் 27-ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இணை இயக்குனர் பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகம் தண்டையார்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-ல் செயல்படுகிறது. எனவே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அங்கேயே சென்று வேட்பு மனுக்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த இடைத்தேர்தலில் சசிகலா அணி தரப்பில் அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.
ஓ.பி.எஸ் அணி தரப்பில் மதுசூதனன் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞரும் செய்தியாளருமான மருதுகணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க. வேட்பாளராக மதிவாணன் தேர்வு செய்யப்பட்டு இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
அதன்வரிசையில் பா.ஜ.சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.