இருளர் பெண்களை நிர்வாண கொடுமை செய்தது உண்மைதான்..சொல்ல முடியாத கொடுமைகள் இருக்கு.. நிஜ ஜெய் பீம் சந்துரு பகீர்

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2021, 4:53 PM IST
Highlights

இப்படி சமூக அநீதியை கண்டு பொங்கும் வழக்கறிஞர்களும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தீரமிக்க சந்ததியையும் உருவாவதற்கான எண்ணத்தை இளம் சமுதாயத்தினர் மத்தியில் இந்த படம் விதைக்கும் வகையில் திரைப்படம் உள்ளது.

இருளர் பெண்களை போலீஸார் நிர்வாண கொடுமை செய்தது உண்மைதான் என்றும், இன்னும் காட்சிப்படுத்த முடியாத சம்பவங்களும் நடந்தது என்றும், நிஜ ஜெய்பீம் கதாநாயகன் சந்துரு பேட்டி கொடுத்துள்ளார்.

காக்கி சட்டை காவல் சகிதம் கலக்கி வந்த நடிகர் சூர்யா, முதல்முறையாக வழக்கறிஞர் கெட்டப்பில் அநீதி இழைக்கப்பட்ட பழங்குடியினர் சமூகத்திற்காக போராடும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஜெய்பீம், இது அவரது 39வது திரைப்படம் ஆகும், இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், பிரகாஷ்ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் அமேசான் பிரைம் இல் வெளியாகியுள்ள இந்தப் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் ரியல் கதாநாயகனாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சூர்யா, ஜெய் பீம் கடலூர் மாவட்டத்தில் போலீஸாரால் திருட்டு பட்டம் கட்டப்பட்டு விசாரணையின்போது  போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டு திருச்சி மாவட்ட எல்லையில் பிணமாக தூக்கி எறியப்பட்ட ராசா கண்ணு என்ற இருளரின் வழக்குதான் கதை, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது கையாண்ட வழக்குதான் ஜெய் பீம் திரைப்படம், அதில் நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் சூர்யா, இந்த வழக்கு தொடர்பான எல்லா காட்சிகளும் கதாபாத்திரங்களும் உயிரோடு இருக்கும் சூழ்நிலையில் இந்த படம் திரைக்கு வந்துள்ளது. காவல் நிலையத்தில்  போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராசா கண்ணுவின் மனைவி செங்கேணி என்ற கதாபாத்திரத்தில்  நடிகை லிஜோமொள் ஜோஸ் நடித்துள்ளார். வீசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவன் மாயமான நிலையில் தனது கணவனுக்காக நீதிகேட்டு வழக்கறிஞர் சந்துருவை அணுகும் செங்கேணி, தனது கணவனுக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி பெற்றாரா என்பதுதான் கிளைமாக்ஸ். 

ராசா கண்ணு மீது திருட்டு பழி போடும் போலீஸ் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது அவரது மனைவி மற்றும் சகோதரியை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக அடித்து உதைக்கிறது, அந்தப் பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை செய்வது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் திரையில் காணும்போது காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது, போலீசார் இப்படியெல்லாம் கொடுமை செய்வார்களா? காவல் நிலையத்தில் இப்படி கொடுமை நடக்குமா என பார்வையாளர்களிட் ரத்தத்தை சூடேற்றும் வகையில் அந்த காட்சிகள் உள்ளது.  இந்த காட்சிகள் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளதுடன், காவல்துறையினரின் கொடூர முகத்தை சமூகத்திற்கு அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்த திரைப்படத்தில் இருளர் இன பெண் செங்கேணி நிறைமாத கர்ப்பிணியாக நீதிமன்றத்தின் வாயிலில் போராடி இறுதியில் நீதி பெறுகிறார், அதாவது நீதி மறுக்கப்படும் மக்களுக்கு சந்துரு போன்ற வழக்கறிஞர்கள் கரம் கொடுத்து உடன் நிற்கிறார்கள், சட்டம் என்ற ஆயுதத்தின் மூலம் அது சாத்தியப்படுகிறது என்ற நேர்மறையான எண்ணத்தை இந்த படம் விதைத்துள்ளது.

இப்படி சமூக அநீதியை கண்டு பொங்கும் வழக்கறிஞர்களும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தீரமிக்க சந்ததியையும் உருவாவதற்கான எண்ணத்தை இளம் சமுதாயத்தினர் மத்தியில் இந்த படம் விதைக்கும் வகையில் திரைப்படம் உள்ளது. இதில் படத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு காட்சிகள் பேசு பொருளாகவும் சில காட்சிகள் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரியல் ஜெய்பீமான ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு இந்த திரைப்படம் குறித்து மனம்திறந்த பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ள அவர் இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் 95% உண்மையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு சில காட்சிகள் மட்டும் திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் பெரும்பாலான காட்சிகள் உண்மை சம்பத்தை பிரதிபலித்துள்ளது. அதிலும் குறிப்பாக இருளர் இன பெண்களை காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் உண்மைதான், இன்னும் காட்சிப்படுத்த முடியாத பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது, அது அனைத்தையும் காட்சிப்படுத்தி இருந்தால் இன்னும் படம் பயங்கரமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு கொடுமைகள் நடந்துள்ளது. 

அந்த குற்றத்தில் ஈடுபட்ட போலீசார் பின்னர் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட பெண் செங்கேணியை சந்தித்து வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி பணம் கொடுக்க முயற்சி செய்தனர், ஆனால் படிக்காத அந்த இருளர் இன பெண், அந்தப் பணத்தைப்  வாங்க மறுத்ததுடன் எதுவாக இருந்தாலும் எனது வழக்கறிஞரிடம் பேசுங்கள் என கூறிய நேர்மையை எண்ணி வியக்கிறேன், அதன் பின்னர் அந்த காவலர்கள் என்னையே நேரில் வந்து சந்தித்து எனக்கு பணம் கொடுக்க முயற்சித்தனர். பிறகு அதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன், அதனால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இப்படியாக ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் அப்பட்டமானது, உண்மையை பிரதிபலிக்கிறது என அவர் கூறியுள்ளார். 
 

click me!