சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணை பொது செயலாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளரான புதுக்கோட்டை விஜயா ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் யார்..?
திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அரசியலில் இருந்து முழுமையாக விலகியதாக கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் 280 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார். சட்டமன்ற தேர்தலில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஈரோடு மாவட்டத்தில் உள்ளடி வேலைகள் மூலம் சுப்புலெட்சுமி ஜெகதீசன் தொற்கடிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதி வருகின்றனர். இதனையடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக அரசில் ஏதேனும் பொறுப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்த்தார் அதுவும் வழங்கப்படவில்லை, மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது வழங்குவார்கள் என காத்திருந்தார் அதுவும் கைக்கு எட்டாமல் சென்றுவிட்டது.
புதுக்கோட்டை விஜயாவிற்கு வாய்ப்பா..?
இதன் காரணமாக கட்சி தலைமை நடத்திய நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சுப்புலெட்சுமி புறக்கணித்து வந்திருந்தார். இந்தநிலையில் தான் அரசியலில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் திமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்த இடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகின்றார். அந்த வகையில், இந்த பதவி மு.க.ஸ்டாலினால் நியமனம் செய்யக்கூடிய பதவி என்பதாலும் பெண்களுக்கு மட்டுமே இந்த பதவி ஒதுக்கப்படும் என்பதாலும் அடுத்து யார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் என்ற கேள்வி திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாமல் தொண்டர்களிடமும் எழுந்துள்ளது.
கனிமொழிக்கு வாய்ப்பு
இந்த பதவியைப் பெற பல பேர் முயற்சித்து வரும் நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழிக்கு இந்த பதவி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மகளிர் அணி செயலாளராக இருக்கும் அவர் துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்பாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. கனிமொழி இந்த பதவியை ஏற்க மறுக்கின்ற பட்சத்தில் இந்த பதவிக்கு திமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளரான புதுக்கோட்டை விஜயாவிற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. திமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் பெரும்பாலான இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிய துணை பொதுச்செயலாளராக யாரை நியமிக்கிப்படுகிறார்கள் என தெரியவரும். தற்போது உள்ள நிலையில் கனிமொழியின் கையே ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்