நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது பிரச்சார பயணத்தை தமிழகத்தில் இருந்து தொடங்கும் வகையில் வருகிற மார்ச் 22ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் தேர்தல் வியூகம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி வருகிற மார்ச் 14 அல்லது 16ஆம் தேதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக 3 வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதியை இலக்காக மாநில தலைவர்களுக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் 25 தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளை தங்கள் அணியில் இணைத்து வருகிறார்.
தமிழகத்திற்கு மீண்டும் வரும் மோடி
பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலோடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றுள்ளார். அங்கு வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினத்திலோ அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 முறை தமிழகம் வந்துள்ளார். அப்போது தமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கிவைத்து வருகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் வருகிற 22ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறாரா மோடி.?
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தமிழக பயணம் இருக்க வாய்ப்பில்லையென கூறப்படுகிறது. எனவே தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தில் இருந்து தொடங்க பிரதமர் மோடி விருப்பப்படுவதாக தெரிகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்