பாஜகவில் இணைகிறாரா ஜெ. தீபா..? அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க களம் இறங்கிய அண்ணாமலை ஆதரவாளர்கள்

By Ajmal Khan  |  First Published Mar 17, 2024, 4:04 PM IST

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை பாஜகவில் இணைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதிமுக மற்றும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 


அதிமுகவும் அதிகார மோதலும்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் அதிமுகவில் பல பிரிவுகளாக பிளவுபட்டது. குறிப்பாக எடபாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என பிரிந்தது. இவர்களுக்கு போட்டியாக நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு என களம் இறங்கினார் ஜெ.தீபா, அப்போது ஜெயலலிதா சாயலில் இருப்பதாலும், ஜெயலலிதா உறவினராக இருப்பதாலும் தீபா அதிமுக தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் இருந்த ஒரு சிலர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து  தனது கணவர் மாதவனோடு இணைந்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தொடங்கினார் ஜெ.தீபா, 

Latest Videos

அரசியலில் ஜெ.தீபா

ஆரம்பத்தில் ஜெ.தீபா கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து இணைந்த நிலையில், திடீரென ஜெ.தீபாவின் செயல்பாட்டால் கட்சி பின்னடைவை சந்தித்தது. இந்த சூழ்நிலையில்  ஜெயலலிதாவின் போயஸ்  இல்லத்தை அரசு நினைவில்லமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்போராட்டம் நடத்தினார். இதனால் போயஸ் கார்டன் இல்லத்தை ஜெ.தீபா மற்றும் அவரது சகோதாரர் ஜெ.தீபக் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த சில நாட்களில் தனது பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்திருந்த அவர், பொதுவாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுகிறேன் என்றும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என முகநூலில் பதிவிட்டு அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையசெய்தார். 

அரசியலில் இருந்து விலகிய ஜெ.தீபா.?

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த கூட்டணி எதிர்கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பரிசாக கிடைத்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டுமென அக்கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி இருந்து வெளியேறி நாடாளுமன்றத் தேர்தலை தனியாக அதிமுக சந்திக்க உள்ளது.  கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் தமிழகத்தி்ல் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்பட்டது. எனவே பல முறை முயன்றும் அதிமுகவை தங்கள் வசம் கொண்டுவரமுடியாத காரணத்தில் அதிமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் பணியை தீவிரப்படுத்தியது.

பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை

குறிப்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரை அதிமுகவிற்கு இழுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக் கொடுத்திருந்தது.இந்தநிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை பாஜகவிற்கு இழுக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஜெ.தீபா, மீண்டும் அரசியலில் களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதையும் படியுங்கள்

பாஜக vs காங்கிரஸ்: தேர்தல் வரலாற்றில் வளர்ச்சியும், வீழ்ச்சியும்..!

click me!