பாக், சீனாவுடன் சேர்ந்து தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம்.. பாஜகவும் அதை செய்ய வேண்டாம்.. கதறும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Mar 22, 2021, 2:04 PM IST
Highlights

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து அன்றைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்த அதே பச்சை துரோகத்தைத் தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துவிடக்கூடாது. 

ஐ.நா. அவையில் இனப்படுகொலை நாடான இலங்கைக்கு ஆதரவளித்து, மீண்டும் ஓர் வரலாற்றுப் பெருந்துரோகத்தை இந்திய அரசு புரிந்துவிடக்கூடாது என சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கையின் இனப்படுகொலைப் போர்க்குற்றங்கள் குறித்துப் பிரிட்டன், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட ஆறு நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா உறுதிப்பட ஆதரிக்காது’ என இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் முடிவுபற்றி அறிவிக்கும் அதிகாரத்தை ஜெயநாத் கொலம்பகேவுக்கு யார் கொடுத்தது? அவர் இலங்கையின் வெளியுறவுச் செயலாளரா? அல்லது இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரா? ஜெயநாத் கொலம்பகே இந்திய அரசின் ஒப்புதலுடன்தான் இதை அறிவித்தாரா? என்ற கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். 

இந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலையான ஈழ தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகத் தமிழினம் பன்னாட்டு அரங்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எவ்வித நீதியும் கிடைக்காது சோர்வுற்றிருந்த நிலையில், கடந்த ஜனவரி 27 அன்று இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் வெளியிட்ட அறிக்கை அறுபது ஆண்டுகாலமாகச் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் தமிழர்களின் உரிமைக்குரலின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. அதன் பிறகாவது உலக நாடுகள் தங்களது அறம் தவறிய அமைதியைக் கலைந்து  மனிதநேயத்துடன் இனப்படுகொலைக்கு ஆளான தமிழினத்திற்கு நீதிப்பெற்றுத் தரும் என்று உலகத்தமிழினம் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், ஐ.நா உயராணையர் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக இனப்படுகொலை குறித்த விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், மீண்டும் உள்நாட்டு விசாரணை, போர்க்குற்றம் பற்றி விசாரிக்கக் கால நீட்டிப்பு என இனப்படுகொலை குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையிலேயே பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டுவரும் தீர்மானம் அமைந்துள்ளது. 

அத்தீர்மானத்தில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை, இனப்படுகொலை குற்றங்களை ஆவணப்படுத்தும் பொறிமுறை உள்ளிட்டவற்றைச் சேர்த்து வலுவுள்ளதாக்க வேண்டுமென்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் குரல்கொடுத்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழர்கள் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து தீர்மானத்தை மேலும் வலுவானதாக்க முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய இந்திய அரசு, அதற்கு மாறாகப் பிரிட்டன் முன்மொழியும் குறைந்தபட்ச தீர்மானத்தையும் ஆதரிக்காது, தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருப்பது, கொதித்துப்போயுள்ள தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டும் விதமாய் அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ‘சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டுமென அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது  திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு அரசு. 

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து அன்றைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்த அதே பச்சை துரோகத்தைத் தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துவிடக்கூடாது. தமிழினத்திற்கு அணுவளவாது ஏதேனும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று பாஜக உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமாயின் இனப்படுகொலை செய்த இலங்கையைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கும்படி தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப்பெற்று ஐ.நா. பேரவையில் நிறைவேற்றச் செய்ய வேண்டும். அதைவிடுத்து நட்பு நாடு என்றுகூறி இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நிற்கும் தமிழர்களை வஞ்சித்து மீண்டும் ஒரு வரலாற்றுப் பெருந்துரோகத்தை இந்திய அரசு செய்துவிடக்கூடாது. 

இவற்றையும் மீறி தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி இனப்படுகொலை செய்த இலங்கையைக் காக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுமாயின் உலகத்தமிழனம் அதை ஒருபோதும் மன்னிக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழினப்படுகொலை நடைபெறத் துணைபோனவர்களுக்கும், அக்குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றத் துணைபோனவர்களுக்கும் தமிழக மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன். 

 

click me!