
சொகுசு கார்கள் வாங்கப்பட்டது தொடர்பாக திவாகரனின் மகள் ராஜமாதங்கியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் சசி குடும்பத்தின் மீது நடத்தப்படும் சர்ஜிக்கல் அட்டாக்-ல் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1994 ஆம் ஆண்டு லெக்சஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்து ரூ.1 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீது வழக்கு உள்ளது. இந்த நிலையில், சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக திவாகரனின் மகள் ராஜமாதங்கியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு வழக்கில் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் நடராஜன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். 2010 ஆம் ஆண்டு நடராஜனுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகள் ராஜமாதங்கி, சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள், திவாகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில், சொகுசு கார்கள் இறக்குமதி செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிறைய கார்கள் ராஜமாதங்கி பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ராஜமாதங்கியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு கார்கள், ராஜமாதங்கிக்காக இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது அவருடைய பெயரில் இறக்குமதி செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.